Home உறவு-காதல் கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

34

அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.

மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும். புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.

துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.

நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும். கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும்.

இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும். புரிந்து கொள்ளல், பணிவு, பொறுப்பு, உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.