Home அந்தரங்கம் வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

27

மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்

நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்

உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்

அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்

பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.