Home குழந்தை நலம் குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய் (Commode rash)

குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய் (Commode rash)

65

‘நான் மாட்டன்’ அந்தக் குட்டிப் பையன் வெட்கத்துடன் சொன்னான். மாட்டன் என்று பிடிவாதம் பிடித்த அவனுக்காக அம்மா செய்ய வேண்டியதாயிற்று.

கழற்றியதும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் சிணுங்கிக் கொண்டே நின்றான்.

‘இவன் எப்ப பாத்தாலும் பின் பக்கமாகச் சொறியிறான்.’ என்று தாய் சொன்னபடியால்தான் கால்சட்டையை அகற்றுமாறு சொல்ல நேர்ந்தது.

ஆனால் அதற்கு முன்னரே அவனது கைகள் முகம் கழுத்து உடல் அக்குள் காதின் பின்புறம் என அவனது உடல் முழவதையும் அக்கறையோடு பார்த்துவிட்டேன். வேறு இடங்களில் எந்த சரும மாற்றத்தையும் காண முடியவில்லை.

அப்பட்டமாகத் தெரிந்தது வேறு எதுவுமல்ல. நோயுற்ற அவனது தொடைச் சருமம்தான். வெண்மையான அவனது சருமம் பாதிப்புற்று ஆங்காங்கே அலங்கோலமாகக் காட்சியளித்தது. அவனது பிட்டம் (குண்டிப் பகுதி) மற்றும் தொடையின் பின்புறமாக மேற்பகுதியிலும் சருமத்தில் சொரசொரப்பாக அரிப்புக் (Rash) கண்டிருந்தது. ஒரு சில இடங்களில் அது சிறு புண்களாகவும் மாறியிருந்தன.

கொமோட் அரிப்பு (Commode rash) என்று இங்கு மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.
Toilet seat rash என்று பொதுவாகவும் toilet seat dermatitis என மருத்துவதிலும் சொல்லுவார்கள்.

ஐந்து புதிய அத்தகைய நோயாளிகளை இனங் கண்டதாக 2010 ல் வெளியான ஒரு மேலைத்தேய மருத்துவ அறிக்கை கூறியதை படித்தபோது ஆச்சரியமாக இருந்து. இங்கு நான் மட்டுமே பல குழந்தைகளைக் கண்டுள்ளேன்.

“நாங்கள் கேடு கெட்டனாங்கள் ஒன்றையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. அதனாலைதான் இஞ்சை அதிகம். அவர்கள் எதிலும் வலு கிளீன்” என்று சொல்ல வருகிறீர்களா?

அருகே நெருங்கவிடாது பொது மலசல கூடங்கள் நாற்றத்தால் விரட்டியடிப்பதும், ஒதுக்குப் புறமான இடங்களில் மதிலோரம் மூத்திர நாற்றம் மூச்சடக்கச் செய்வதும். காலையில் வீதியோரமாக மலங்கழிக்க வீட்டு நாய்களை அழைத்துச் செல்வதும் தலைநகரத்திலும் சகசமாகக் காணக்கிடைக்கையில் எமது சுகாதரம் பற்றிப் பெருமையாகப் பேச என்ன இருக்கிறது.

இருந்தபோதும் இது சுகாதாரக்கேட்டால் வரும் தொற்று நோயல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். நோயுற்ற ஒருவரிலிருந்து மற்றவருக்கோ அல்லது அழுக்கான பொருள்களிலிருந்து மனிதர்களுக்கோ பரவும் தொற்று நோயல்ல.

சுகாதாரத்தில் அதிக அக்கறை எடுப்பதால் வரும் நேயென்றும் கூறலாம். அது ஏன் என்பதை கட்டுரையைப் படித்துச் செல்லும்போது புரிந்து கொள்ளலாம்.

ஆதிகாலத்தில் இந்த நோய் இருந்ததில்லை. ஏன் எனில் அக்காலத்தில் மனிதர்கள் குந்திருந்தே மல சலம் கழித்தார்கள். பிட்டம் தொடை படுமாறு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல உயர்ந்த மலசல இருக்கைகள் அறிமுகமான பின்னரே இந்த நோயும் வர ஆரம்பித்தது.

இந்த நோய் பற்றிய முதல் மருத்துவக் குறிப்பு 1927ம் ஆண்டுதான் வெளியானது. அக்காலத்தில் மரத்தாலான இருக்கைகளே இருந்தன. ஈரலிப்பான மர இருக்கைகள்,அதற்கு அடிக்கப்பட்ட வார்னிஸ் பெயின்ட் போன்றைவை காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

 

ஏனெனில் இது ஒருவகை ஒவ்வாமை நோயாகும். வார்னிஸ் போன்றவற்றால் சரும ஒவ்வாவை ஏற்படுவதால் வரும் நோய். ஒட்டுக் கிரந்தி – எக்ஸிமா (Contact Dermatitis) என சொல்லலாம்.

1980 – 1990 வாக்கில் பிளாஸ்டிக்காலான மலசலபீட இருக்கைகள் அறிமுகமாயின. பிளாஸ்டிக்ற்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு என்பதால் இந்த நோயும் அருகிவிடடிருந்தது.

ஆனால் அண்மைக் காலத்தில் மீண்டும் கொமோட் அரிப்பு நோய் வருவற்குக் காரணம் என்ன?
அவற்றைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் மாசகற்றும் பொருட்கள்தான் (Detergents). அவற்றில் பல கடுமையான இரசாயம் கலந்தவையாக இருக்கின்றன. இவையே சருமத்திற்கு ஊறு விளைவித்து ஒட்டுக் கிரந்தி நோய்க்கு காரணமாகின்றன.

இது பெரியவர்கள் குழந்தைகள் என்ற பேதம் இன்றி எவருக்கும் வரக் கூடியது. சில பெரியவர்களிலும் பார்த்திருக்கிறேன். ஆயினும் குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது.

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பது இவர்களில் அதிகம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அங்கு கழிப்பறைக்குச் செல்வார்கள். பெரும்தொகையான பிள்ளைகள் பயன்படுத்துவதால் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை என்பதால் கடுமையான மாசகற்றும் பொருட்களை அதிகளவு உபயோகித்திருப்பார்கள். அதுவே காரணமாயிருக்கலாம்.

அதே போல வீடுகளிலும் எல்லோரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய மாசகற்றும் பொருட்களை; (detergents) உபயோகிக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.

அப்படியானால் தடுப்பது எப்படி?
மரத்தாலான கழிப்பறை இருக்கைகள் இன்னமும் பாவனையில் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பாதுகாப்பான பிளாஸ்டிக் இருக்கைகளையே உபயோகிக்க வேண்டும்.
கடுமையான மாசகற்றும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. எந்த வகையான இரசாயங்களுக்கும் ஒவ்வாவை ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் ஒரு சிலருக்கு சோப் போன்றவற்றிகும் ஏற்படுதுண்டு அல்லவா? மேலை நாடுகளில் செய்த ஆய்வுகளில் அவற்றில் கலந்திருந்த Didecyl dimethyl ammonium chloride and Alkyl dimethyl benzyl ammonium chloride போன்ற பொருட்கள்தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. உதாரணங்களாக Phenol, Formaldehyde ஆகியவற்றைச் சொல்லலாம்.
இவற்றிக்குப் பதிலாக Sprit, hydrogen peroxide போன்றவறைச் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.
மாசகற்றும் இரசாயனங்களால் சுத்தப்படுத்திய பின்னர் அவற்றின் தாக்கம் சிறிதளவும் இல்லாதவாறு இருக்கைகளை அதிக நீரால் கழுவி அகற்ற வேண்டும்.
குழந்தைகள் அதில் உட்காரும் போது அந்த இருக்கைகளின் மேல் சுத்தமான பத்திரிகைத் தாளை அல்லது துணித் துண்டைப் போட்டு உட்காரச் சொல்லலாம். ஒவ்வாமை உள்ள பெரியவர்களும் அவ்வறே செய்கின்றன.
சிகிச்சை

சிகிச்சைப் பொறுத்த வரையில் ஒவ்வாமைக்கு எதிரான ஸ்டீரொயிட் வகை கிறீம் வகைகைளை உபயோகித்தால் சுகமாகும்.

ஆனால் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின் அத்தகைய இரசாயனங்கள் சருமத்தில் படாதவாறு தவிர்ப்பது அவசியம்.

பாடசாலைகளிலும் பொதுக் கழிப்றைகளிலும் உபயோகிக்கக் கூடிய toilet seat covers மேலை நாடுகளில் பரவலாகக் கிடைக்கினறன. இங்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை உபயோகிக்கலாம்.

கக்கூஸ் பற்று என்று நம்மவர்கள் சொல்லும் நோயிற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அதை மருத்துவத்தில் Tinea cruris என்பார்கள். அது ஒரு பங்கஸ் தொற்றுநோய். அது பொதுவாக தொடை இடுக்குகில் எற்படும் அரிப்பாகும்.