Home இரகசியகேள்வி-பதில் பாலியல் கவர்ச்சிக்கு உதவும் சென்ட் – ஃபெரமோன்கள்

பாலியல் கவர்ச்சிக்கு உதவும் சென்ட் – ஃபெரமோன்கள்

50

ஃபெரமோன் என்பது விலங்குகள் அல்லது பூச்சி இனங்களில், தனது இனத்தின் எதிர்பாலினத்துடன் தகவல்பரிமாற்றம் செய்துகொள்ள அல்லது உடலியல் அல்லது உணர்வுசார்ந்த எதிர்வினையை வெளிப்படுத்துவதற்காகச் சுரக்கப்படுகின்ற அல்லது வெளியேற்றப்படுகின்ற ஒரு வேதிப்பொருளாகும். “ஃபெரமோன்” என்ற சொல் “ஃபெரின்” (கொண்டிருத்தல்) மற்றும் “ஹார்மோன்” (கிளர்ச்சி அடையச் செய்தல்) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது.

செக்ஸ் ஃபெரமோன்கள் எனப்படும் இந்த வேதிப்பொருள்கள் (சென்ட்) தனது இனத்தைச் சேர்ந்த எதிர்பாலின உயிரியை, கலவிக்காக அல்லது பாலியில் இனப்பெருக்கத்திற்கு நெருக்கமான தொடர்புடைய வேறு செயல்களுக்காக, தன்னை நோக்கிக் கவருவதற்காக வெளியிடப்படுகிறது.

மனிதர்களுக்கும் செக்ஸ் ஃபெரமோன்கள் சுரக்கிறதா?

விலங்குகளைப் பொறுத்தவரை, வாசனையின் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது முக்கியமான ஒன்று. பிற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மிகக் குறைவாகவே மோப்ப சக்தி உள்ளது என்பதால், மனிதர்களுக்கும் இந்த ஃபெரமோன்கள் சுரக்குமா என்பது பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. உதாரணமாக, நாய்களுக்கு மூக்கில் 23 கோடி மோப்ப உணர்விகள் உள்ளன, மனிதர்களுக்கோ 1 கோடி உணர்விகளே உள்ளன.

பிற மனித குரங்கினங்களைப் போலவே மனித இனமும் மேம்பட்ட கண்பார்வைத் திறன் கொண்ட இனமாகக் கருதப்படுகிறது. அதாவது கண் பார்வைத் திறனைவிட மோப்ப சக்தி குறைவு. எனினும், மனிதர்களிலும் மணம் என்பது தகவல் பரிமாற்றத்தின் ஒரு வடிவமாக, நடத்தை மற்றும் பாலியல் உயிரியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

A) மனிதர்களுக்கும் மூக்கில் ஃபெரமோன் உணர்விகள் உள்ளன.

பெரும்பாலான பாலூட்டிகளில், ஃபெரமோன்களை உணரும் செயலைச் செய்ய வாமெரோநாசல் ஆர்கான் (VNO) எனப்படும் ஒரு பிரத்யேகப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியின் எளிமையான, அடிப்படை வடிவமே மனித குரங்குகளில் உள்ளன என்பதால், மனிதர்களுக்கும் VNO எனும் பகுதி இல்லாமல் இருக்கலாம் என்று கருதப்பட்டது.

எனினும், மனிதர்களுக்கும் மூக்கின் இரு பிரிவுகளிலும் VNO உள்ளது என்று இப்போது கருதப்படுகிறது. இந்த உணர்வு ஏற்பிகளில் இருந்து செல்லும் நரம்புகள் கூடுதல் வாசனை உணர்வுக் குமிழுக்குச் சென்று சேர்கின்றன. இந்தப் பகுதியானது வாசனை பற்றிய தகவலை மூளையில் உள்ள ஹைப்போதலாமசிற்கு அனுப்புகிறது. ஆகவே ஹைப்போதலாமோ-பிட்யூட்டரி அச்சின் வழியாகச் செயல்பட்டு பாலியல் மற்றும் இனப்பெருக்க நடத்தைகள் மற்றும் நாளமிலா சுரப்புச் செயல்பாடுகளில் ஃபெரமோன்கள் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மனிதர்களின் மூக்கில் மணம் உணரும் பகுதியில் ஃபெரமோன் ரெசிப்டர்களுக்கான குறியீடுகளைக் கொண்டுள்ள சில மரபணுக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டலை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் மிகச் சிறிய அளவிலான ஃபெரமோன்களையும் கண்டறியக்கூடிய முழுமையான செயல்திறன் கொண்ட VNO பகுதி மனிதர்களுக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

B) மனிதர்களில் சுரக்கும் சில வேதிப்பொருள்கள் ஃபெரமோன்களாக இருக்க வாய்ப்புள்ளது

உடலில் எல்லா இடங்களிலும் தோலில் அப்போக்ரைன் சுரப்பிகள் எனப்படுபவை இருக்கின்றன. இவை அக்குள்கள், இனப்பெருக்க உறுப்புப் பகுதி, இனப்பெருக்க உறுப்புகள், முலைக்காம்புகள், வாயைச் சுற்றிலும் உள்ள இடம், ஆசனவாயைச் சுற்றிலும் உள்ள பகுதி போன்ற இடங்களில் அதிக அளவில் உள்ளன.

மனிதர்கள் பூப்படையும் சமயத்தில் இந்த அப்போக்ரைன் சுரப்பிகள் செயல்படுகின்றன. இந்த சுரப்பிகள், ஃபெரமோன்களைச் சுரக்கும் வாசனை சுரப்பிகளாகக் கருதப்படுகின்றன. இவை ஸ்டிராய்டு அடிப்படையிலான சில சுரப்புகளைச் சுரக்கின்றன. இவை சுரப்பது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் பாதிக்கப்படுகின்றன (இதனால் பெண்களை விட ஆண்களுக்கு இவை அதிகமாகச் சுரக்கின்றன). சுரக்கும்போது இவை மணமற்றவையாகவே இருக்கும், தோலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் வீசும்படி மாற்றிவிடுகின்றன.

செக்ஸ் ஃபெரமோன்களாகச் செயல்படக்கூடிய ஹார்மோன்களில் சில: ஆண்களில் ஆண்ட்ரோஸ்டினோன் (பெண்களைக் கவரக்கூடியது), பெண்களில் ஆண்ட்ரோஸ்டினால் (ஆண்களைக் கவரக்கூடியது).

பெண்களுக்கு பெண்ணுறுப்பில் இருந்து கோப்புலின்ஸ் எனப்படும் பொருளும் சுரக்கிறது, அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் அவர்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அதன் மணமும் மாறுபடும்.

C) மனிதர்களின் பாலியல் விருப்பங்கள் மற்றும் நடத்தையில் இந்த ஃபெரமோன்களின் பங்கு இருப்பதாகக் கருதப்படுகிறது

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஃபெரமோன்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், மனிதர்களின் பாலியல் நடத்தையிலான தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அதில் பாலியலில் இவை நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கண்டறிந்தனர்.

ஆண்களில்

ஓர் ஆராய்ச்சி ஆய்வில் முப்பத்தெட்டு (38) ஆண்கள் பங்கேற்றனர்.
அவர்களின் ஆறு சமூக பாலியல் நடத்தைகளைப் (முறையான டேட்டிங், தற்போக்கான டேட்டிங், பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் சீண்டுதல்/பாசம்/முத்தமிடுதல், சுயஇன்பம் செய்துகொள்ளுதல், இணையருடன் படுத்துறங்குதல் மற்றும் உடலுறவில் ஈடுபடுதல் ஆகியவை) பற்றி 2 வாரம் வரை பதிவு செய்யப்பட்டது. இது அடிப்படைத் தரவாகப் பயன்படுத்தப்பட்டது.
முதல் 2 வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினருக்கு சாதாரணமான ஆஃப்டர் ஷேவ் லோஷன் கொடுக்கப்பட்டது. இன்னொரு குழுவுக்கு சிந்தட்டிக் ஆண் ஃபெரமோன் கலந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் கொடுக்கப்பட்டது. மேலும் 6 வாரங்களுக்கும் அவர்களது சமூக பாலியல் நடத்தைகள் பதிவு செய்யப்பட்டன.
இரண்டாவது குழுவில் (ஃபெரமோன் சேர்க்கப்பட்ட) உள்ளவர்களுக்கு, ‘உடலுறவு’ மற்றும் ‘இணையருடன் படுத்துறங்குவது’ ஆகிய இரண்டு விஷயங்கள் கணிசமாக அதிகரித்தது தெரியவந்தது.
ஃபெரமோன் ஆஃப்டர் ஷேவ் குழுவில் இருந்தவர்களில் சுமார் 58% பேருக்கு இரண்டு அல்லது மேற்பட்ட பாலியல் செயல்பாடுகள் அதிகரித்தன. சாதாரண ஆஃப்டர் ஷேவ் லோஷன் குழுவில் இருந்தவர்களில் 19% பேருக்கு மட்டுமே பாலியல் செயல்பாடுகள் அதிகரித்தன.
ஃபெரமோன் ஆஃப்டர் ஷேவ் குழுவில் இருந்தவர்களில் சுமார் 41% பேருக்கு மூன்று பாலியல் செயல்பாடுகள் அதிகரித்தன. சாதாரண ஆஃப்டர் ஷேவ் லோஷன் குழுவில் இருந்தவர்களில் 5% பேருக்கு மட்டுமே மூன்று செயல்பாடுகள் அதிகரித்தன.
பெண்களில்

ஓர் ஆராய்ச்சி ஆய்வில் முப்பத்தாறு (36) பெண்கள் பங்கேற்றனர்.
அவர்களின் ஏழு சமூக பாலியல் நடத்தைகளைப் (முறையான டேட்டிங், தற்போக்கான டேட்டிங், பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் சீண்டுதல்/பாசம்/முத்தமிடுதல், சுயஇன்பம் செய்துகொள்ளுதல், இணையருடன் படுத்துறங்குதல், உடலுறவில் ஈடுபடுதல் மற்றும் ஆண்கள் தங்களிடம் பாலியல் ரீதியில் அணுகுவது ஆகியவை) பற்றி 2 வாரம் வரை பதிவு செய்யப்பட்டது. இது அடிப்படைத் தரவாகப் பயன்படுத்தப்பட்டது.
முதல் 2 வாரங்களுக்குப் பிறகு, ஒரு குழுவினருக்கு சாதாரணமான பெர்ஃப்யூம் கொடுக்கப்பட்டது, மற்றொரு குழுவில் இருந்தவர்களுக்கு சிந்தட்டிக் பெண் ஃபெரமோன் கலந்த பெர்ஃப்யூம் கொடுக்கப்பட்டது, அதை அவர்கள் தினமும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் 6 வாரங்களுக்கும் அவர்களது ஏழு சமூக பாலியல் நடத்தைகள் பதிவு செய்யப்பட்டன.
ஃபெரமோன் உள்ள பெர்ஃப்யூம் பயன்படுத்தியவர்களில், ‘முறையான டேட்டிங்’ மற்றும் ‘உடலுறவு’ என்ற இரண்டு சமூக பாலியல் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்தன.
ஃபெரமோன் பெர்ஃப்யூம் குழுவில் இருந்தவர்களில் சுமார் 74% பேருக்கு மூன்று அல்லது மேற்பட்ட பாலியல் செயல்பாடுகள் அதிகரித்தன. இதுவே சாதாரண பெர்ஃப்யூம் குழுவில் இருந்தவர்களில் 23% பேருக்கு மட்டுமே பாலியல் செயல்பாடுகள் அதிகரித்தன.
டியோடரண்ட் பயன்படுத்தும் முன்பு கொஞ்சம் யோசிக்க வேண்டும்!

ஃபெரமோன்கள் பாலியல் கவர்ச்சியிலும் பாலியல் நடத்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருத கணிசமான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. பிற விலங்குகளைப் போலவே, மனிதர்களும் உயிரியல் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ள உடல் மணத்தைப் பயன்படுத்தலாம்.

சுகாதாரம் குறித்து மிகையான விழிப்புணர்வுடன் இருப்பதும், டியோடரண்ட் பயன்படுத்துவதும் நமது சமூக வாழ்விலும் இனப்பெருக்க வெற்றியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்!