Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி

உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி

33

சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். காலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான்அதிகமாக்க வேண்டும்.

பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது, சந்தை, கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்தே செல்வது என்று செய்யும் வியர்வை சிந்தும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன் அளிக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியன உடல் எடையைக் குறைக்க உதவும்.

விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற தங்களுக்குப் பிடித்தமான வெளிப்புற விளையாட்டில் ஈடுபடலாம். லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் பயன்படுத்துவது மூட்டுகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடற்பயிற்சிக்கூடத்தில் சேர வாய்ப்பிருந்தால் சேர்ந்து அங்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி பலன் பெறலாம். கணிப்பொறி முன்பு அதிக நேரம் உட்காராமல் அவ்வப்போது நடக்க வேண்டும். வெகு நேரம் ஒரே இடத்தில் உட்காருவதோ நிற்பதோ கூடாது.

வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளியலறையைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டு செய்தால் உடல் எடை குறையும். வெளியில் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம்.

உடற்பயிற்சி செய்வதானால் தானாகச் செய்யாமல் அனுபவசாலிகளின் அறிவுரைப்படியோ மருத்துவரின் ஆலோசனைப்படியோ செய்யலாம். யோகா நிலையங்களில் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும். ஆரம்ப நிலையில் மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். பிறகே வேகத்தைக் கூட்ட வேண்டும்.

அளவாக உண்பதும் சுறுசுறுப்புடன் இருப்பதும் உடலை அளவாகவும் அழகாகவும் வைக்க உதவும். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உடற்பயிற்சி செய்பவரை மன அழுத்தம் அண்டாது.

ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடை குறையவில்லை என்றாலும் விடாமல் உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் தொடர வேண்டும். எடையை இரு வாரங்களுக்கு ஒரு முறை சோதித்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதோ உங்கள் நண்பர்களிடம் கூறி ஊக்கம் பெறவோ செய்யலாம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்கவோ குறைத்துக் கொள்ளவோ வேண்டும். அதிக மது அதிக உடல் பருமனை வழங்கும். ஆடல்கள் ஆடுவதும் வேக நடையும் எடையைக் குறைக்க உதவும். உடல் எடையைக் குறைக்கப் பட்டினி இருப்பது கூடவே கூடாது. அது நோய்களை ஏற்படுத்தும்.

தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர வேண்டும், என்றைக்காவது செய்து விட்டு அலுத்துப் போய் அமரக் கூடாது. தொடக்க காலத்தில் சுற்றியிருப்பவர்களின் கேலிப்பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நல்ல நண்பர்கள், தோழிகள் அமைந்தால் அவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு எடையைக் குறைக்க முயற்சிக்கலாம், அது ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்துவதாக அமையும்.

உடல் சோர்ந்தால் மனம் சோர்ந்து போகும், மனம் சோர்ந்தால் உடலில் காட்டி விடும், எனவே மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியையும் உணவுக்கட்டுப்பாட்டையும் கடைபிடித்து உடலைப் பேணுங்கள், நீங்கள் செய்வதோடு மட்டுமில்லாமல் உங்கள் மனைவி, குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்திக் குடும்பமாகவே செய்யுங்கள்.

இன்றைய காலத்தில் பிள்ளைகளைப் படிப்பு, இதர கலைகளுக்கு அனுப்ப முயல்பவர்கள் விளையாட்டு தொடர்பான கலையிலும் சேரப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள். இதனால் சிறு வயதிலேயே அதிக எடையுடன் அவஸ்தைப்பட நேராது. உடல் எடையைச் சீராக்குவதன் மூலம் நோய் நொடிகள் அண்டாமல் நீண்ட காலங்கள் வாழலாம்.