Home பாலியல் நிணநீர் மண்டல நோய்த்தொற்று – ஆணுறுப்பின் மீது வலியில்லாத சிறிய புண்கள்

நிணநீர் மண்டல நோய்த்தொற்று – ஆணுறுப்பின் மீது வலியில்லாத சிறிய புண்கள்

109

லிம்ஃபோக்ரானுலோமா வெனரியம் (LGV) என்பது கிளாமிடியா டிராக்மாட்டிஸ் எனப்படும் பாக்டீரியாவால் அரிதாக ஏற்படக்கூடிய ஒரு வகை பால்வினை நோயாகும். LGV என்பது நிணநீர் மண்டலத்தின் நாள்பட்ட நோய்த்தொற்றாகும்.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் மற்றும் தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. எனினும், வாடா அமேரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் ஆண்களுடன் பாலுறவில் ஈடுபடும் (MSM) ஆண்களுக்கு தற்போது இந்த நோய் அதிகரித்து வருகிறது. இதனால் ப்ராக்டைட்டஸ் எனும் மலக்குடல் அழற்சி ஏற்படுகிறது.

காரணங்கள்

கிளாமிடியா டிராக்மாட்டிஸ் எனப்படும் பாக்டீரியாவின் செரோவார்ஸ் L1, L2 அல்லது L3 என்ற மூன்று வகை இனங்களில் எதனாலும் LGV நோய்த்தொற்று வரலாம்.

பாலியல் தொடர்பின் மூலம் இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

LGV பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் வருகிறது. HIV நோய்த்தாக்கம் உள்ளவர்களுக்கு LGV நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

LGV நோய்த்தொற்று உண்டாகிய சில மாதங்களுக்குப் பிறகே அதன் அறிகுறிகள் புலப்படும்.

இதன் சில பொதுவான அறிகுறிகளாவன:

ஆண்களுக்கு ஆணுறுப்பின் மீது வலியில்லாத சிறிய புண்கள் அல்லது பெண்களுக்கு இனப்பெருக்கப் பாதையில் இதே போன்ற புண்கள் தோன்றும்
பெண்களின் பெண்ணுறுப்பு இதழ்களில் வீக்கம்
தொடை இடுக்குப் பகுதிகளில் தோல் சிவத்தல் மற்றும் வீக்கம்
தொடை இடுக்குப் பகுதிகளில் நிணநீர் கணுக்களின் (முடிச்சு போன்ற வீக்கம்) வீக்கம்குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு, மலக்குடலைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் வீங்கலாம்.
டெனஸ்மஸ் – மலங்கழிக்கும்போது வலி
மலக்குடலில் இருந்து சீழ் அல்லது இரத்தம் வெளியேறுதல் (மலத்துடன் இரத்தம் வெளியேறும்)
நோய் கண்டறிதல்

மருத்துவர் உங்கள் உடல் பிரச்சனைகள் பற்றிய மருத்துவ வரலாற்றையும் பாலுறவு சம்பந்தப்பட்ட வரலாற்றையும் கேட்டறிவார்.

ஏற்கனவே நீங்கள் உடலுறவு வைத்துக்கொண்டிருந்த நபருக்கு LGV இருக்கலாம் என நீங்கள் சந்தேகப்பட்டால், அதைப்பற்றியும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால் அது குறித்தும் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கூறிவிட வேண்டும்.

உடல் பரிசோதனைகள் மூலம் இவற்றைக் கண்டறியலாம்:

பிறப்புறுப்பு பகுதியில் உள்ள புண்கள்
ஆசனவாய்ப் பகுதியில் கசிவை ஏற்படுத்தும் ஃபிஸ்டுலா (வழக்கத்திற்கு மாறான இணைப்பு)
தொடை இடுக்குப் பகுதிகளில் நிணநீர் கணுக்களில் இருந்து தோலின் வழியாக திரவங்கள் வெளியேறுதல்
பெண்களுக்கு பெண்ணுறுப்பின் வெளி இதழ்கள் அல்லது உள் இதழ்களில் வீக்கம்
தொடை இடுக்குப் பகுதிகளில் நிணநீர் கணுக்களில் வீக்கம்
சில பரிசோதனைகள் செய்யப்படலாம்:

நிணநீர் கணுக்களின் திசுப்பரிசோதனை
LGV ஏற்படக் காரணமாக இருக்கும் பாக்டீரியாவைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம்
பாலிமரேஸ் வேதிவினைச் சங்கிலி (PCR) போன்ற மரபியல் பரோசிதனைகள் செய்யப்படலாம். இவை கிளாமிடியா பாக்டீரியாவைப் பற்றிய விவரங்களைப் பெற உதவும்.
சிகிச்சை

LGV நோய்த்தொற்றை அகற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதே பிரதான சிகிச்சையாகும்.
தொடை இடுக்குப் பகுதியில் இருக்கும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஏற்பட்டால், ஊசி குத்தி அதிலுள்ளவற்றை வெளியேற்றினால் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
LGV உள்ள நோயாளிகளுக்கு மற்ற பால்வினை நோய்கள் இருப்பது வழக்கம், ஆகவே அப்படி ஏதேனும் நோய்கள் இருந்தால் அவற்றுக்கான சிகிச்சையும் அளிக்க வேண்டியது அவசியம்.
வலி நிவாரண மருந்துகள் (NSAIDகள் – வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்காக ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் கொடுக்கப்படலாம்.
தடுத்தல்

லேட்டக்ஸ் ஆணுறைகளை (ஆண் அல்லது பெண்ணுறைகள்) சரியான விதத்தில் பயன்படுத்தினால், LGV ஏற்படும் வாய்ப்பு குறையும். பாலியல் செயல்பாட்டின் தொடக்கம் முதல் முடிவு வரை அணிந்திருக்க வேண்டும்.

சிக்கல்கள்

LGV நோய்த்தொற்றின் காரணமாக பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

ஃபிஸ்டுலா உருவாகலாம் – பெண்ணின் பிறப்புறுப்புக்கும் மலக்குடலுக்கும் இடையே ஒரு அசாதாரணமான இணைப்பு உருவாகும்
மூளையழற்சி (மூளை வீக்கம்) – மிகவும் அரிதான சிக்கல்
இனப்பெருக்க உறுப்புகளின் நாள்பட்ட (நீண்ட கால) வீக்கம் மற்றும் அழற்சி
மலக்குடலில் தழும்பு மற்றும் மலக்குடல் குறுகிப் போதல்
மூட்டுகள், கண்கள், இதயம் மற்றும் கல்லீரல் நோய்த்தொற்று
அடுத்து செய்ய வேண்டியவை

LGV நோய்த்தொற்று அல்லது வேறு பால்வினை நோய்கள் இருக்கக்கூடிய ஒருவரிடம் நீங்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது உங்களுக்கு LGV அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.