Home உறவு-காதல் மாற வேண்டியது ஆண்களா? பெண்களா?

மாற வேண்டியது ஆண்களா? பெண்களா?

43

மாற வேண்டியது ஆண்களா? பெண்களா?

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கும் சனுஷா என்ற நடிகையை ஓடும் ரெயிலில் பாலியல் ரீதியாக ஒருவர் சீண்டிய நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. அவரும் துணிச்சலோடு அந்த நபரை பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளார். இதே போல நடிகை அமலாபாலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது துணிச்சலோடு போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்காக, அவர் மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று கைப்பட புகார் எழுதி அளித்திருக்கிறார். இன்னும் சில நடிகைகள் இவர்களை போல துணிச்சலாக செயல்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

பொதுவாக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் பரபரப்பு செய்தியாகிவிடுகின்றன. அவர்கள் அதை துணிச்சலோடு வெளிக்கொண்டு வரும்போதும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதே போல ‘செக்ஸ்’ தொல்லைக்கு ஆளாகும் ஏராளமான பெண்கள் துணிச்சலோடு போலீஸ் நிலையங்களை நாடுகிறார்கள். பலரும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சீண்டல்கள் குறைந்தபாடில்லை.

பஸ்சில் பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுமியை கூட தகாத முறையில் கண்ட இடங்களில் கிள்ளுவது எத்தனை எத்தனையோ இடங்களில் நடக்கிறது. ஏன் 8 வயது சிறுமியை கூட காம இச்சையோடு தானே ஆண்கள் பலரும் பார்க்கிறார்கள். எந்த ஒரு பெண்ணையும் போகப்பொருளாக பார்ப்பது நம் சமுதாயத்தில் புரையோடிப்போன விஷயமாகி விட்டது.

இப்படி பெண்கள் அனுபவிக்கும் கசப்பான பாலியல் தொல்லைகள் அத்தனைக்கும் அவர்கள் அணியும் ‘ட்ரஸ்’ தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். அதாவது, ஆண்களை தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவதால் தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கிறதாம். பெண்கள் அணியும் உடை, அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் ஆபத்தை தேடித் தருகிறதாம். வக்கிர புத்திகொண்ட ஆண்களின் காம இச்சையால் பாலியல் தொல்லைகளையும் எதிர்கொண்டு, அதற்கு காரணமும் பெண்கள் தான் என்று சொல்வது இந்த சமூகத்தில் தொற்றி இருக்கும் எவ்வளவு பெரிய வியாதி?

கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் இதை வெளியில் சொன்னால் உனக்கு தான் அவமானம் என இந்த சமூகம் தவறான அணுகுமுறையை கற்றுக்கொடுத்துவிட்டது. ஒரு பெண் தன்னை ஒருவன் அடித்தாலோ, துன்புறுத்தினாலோ அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்போது, தான் அனுபவிக்கும் செக்ஸ் ரீதியிலான கசப்பான நிகழ்வை வெளியில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? தப்பு செய்பவர்கள் தண்டனை பெற்றால்தானே, தப்பு செய்வது குறையும்.

தினமும் ரோட்டில் நடக்கும்போது, பஸ்சில், ரெயிலில் பயணிக்கும்போது, அலுவலகங்களில் என பெண்கள் ஏதோ ஒரு வகையில் சீண்டல்களை சந்திக்கத்தான் செய்கிறார்கள். ஏன் வீட்டிலும் கூட சில பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்க நேரிடுகிறதே. 8 மாத பச்சிளம் குழந்தை, தனது மாமா முறையில் உள்ள உறவினராலே சிதைக்கப்பட்ட கொடூரமும் இச்சமூகத்தில் தானே நடந்துள்ளது. வெளியில் சென்றால்தான் தவறு என்றால், வீட்டிலும் இப்படி நடந்தால் என்ன செய்வது? கட்டிக்கொடுத்த கணவன் முதல் சுற்றியிருப்பவர்கள் வரை அத்தனை இடங்களிலும் பெண்கள் ஆபத்தை சந்தித்து தான் வருகிறார்கள்.

பொதுவெளியில் இருப்பவர்கள் அதிகம் பாலியல் தொல்லைகளை கடந்து வரவேண்டி உள்ளது. தலைநகரில் மக்கள் வெள்ளமென நிறைந்திருந்த ரெயில் நிலையத்தில் சுவாதியை ஒருவன் கொலை செய்தபோது, தடுக்க முன்வராமல் மற்றொரு ரெயிலில் ஏறி ஓடிய கூட்டம் தானே இங்கு அதிகம்.

அத்துமீறலை தட்டிக் கேட்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது. இந்தியாவில் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். ‘என்ன நடந்தால் நமக்கென்ன’ என்ற மனநிலை தான் பலரிடமும் உள்ளது. ‘நரி, வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்று எதை பற்றியும் கவலைகொள்ளாதவர்கள் தான் ததும்ப இருக்கிறார்கள். இதுவும் சமுதாய சீரழிவுக்கு காரணமாகிவிடுகிறது.

எது எப்படியோ, செல்லும் இடங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை நடிகைகள் தைரியமாக சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். இது பெண் சமூகத்துக்கு நிச்சயம் முன்மாதிரியாக இருக்கும். இதே போல, பாலியல் தொல்லைக்கு ஆளானால், அனைத்து பெண்களும் அச்சமின்றி புகார் அளிக்க முனைப்பு காட்டினால் நல்லதுதான். அவர்களுக்கு இச்சமூகம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். அப்போதுதான் வக்கிரபுத்தி கொண்டோருக்கு வேட்டு வைக்க முடியும்.

மேலும், அடுத்த தலைமுறைக்காவது பெண் குழந்தைகளுக்கே பண்பாடு, கலாசாரத்தை கற்றுக்கொடுப்பது, அறிவுரைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, ஆண் பிள்ளைகளுக்கும் அவற்றையெல்லாம் புகட்ட வேண்டும். அதுவே, பெண்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டத்தை மாற்ற வல்லது. அப்போதுதான் இச்சமூகமும் முன்னேற்றம் காணும்.