Home ஆண்கள் கிரிப்டார்சைடிசம் – விதைகள் கீழிறங்காமை என்பது என்ன?

கிரிப்டார்சைடிசம் – விதைகள் கீழிறங்காமை என்பது என்ன?

113

Male and Female Sex Organs
ஆண் கருவில், விதைகள் முதலில் அடிவயிற்றுக்குள் உண்டாகும், அதன் பிறகு பிறப்பதற்கு சற்று முன்பு அல்லது பிறந்த பிறகே கீழிறங்கி விதைப்பையை வந்தடையும். குழந்தை பிறக்கும் முன்பு, இரண்டு விதைகளில் ஒன்று அல்லது இரண்டும் விதைப்பையை வந்தடையாமல் போவதை விதைகள் கீழிறங்ககாமை என்கிறோம். இவர்களுக்கு விதைகள் வயிற்றிலேயே இருந்துவிடும் அல்லது விதைப்பைக்குள் பகுதியளவே இறங்கியிருக்கும்.

பெரும்பாலும், கீழிறங்காமல் போன விதைகள் முதல் சில மாதங்களுக்குள் விதைப்பைக்குள் இறங்கிவிடும். சில சமயம், அது தானாக சரியாகாது. அந்த நிலையில் விதைகளை விதைப்பைக்குள் கொண்டு சென்று வைக்க அறுவை சிகிச்சை தேவைப்படும்.

காரணங்கள் (Causes)

குழந்தைகளுக்கு விதைகள் கீழிறங்காமல் போவதற்கான காரணம் என்ன என்று பெரும்பாலும் தெரிவதில்லை. சில சமயம், விதைகள் இயல்பாக இல்லாமல் போகலாம் அல்லது அவை கீழிறங்கும் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். விதைகள் போதுமான அளவுக்கு கீழிறங்காமல், ஒன்றை அடுத்து ஒன்று மேலும் கீழும் அமைந்து நின்றுவிடலாம். விதைகளைக் கீழிறங்கச் செய்யத் தூண்ட வேண்டிய ஹார்மோன்கள் சரியாகச் செயல்படாமல் போவதாலும் இப்படி நடக்கலாம்.

பெரும்பாலும், குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள், விதைகள் தானாகவே கீழிறங்கிவிடும். பொதுவாக, மூன்று மாதத்திற்குப் பிறகு விதைகள் தானாகவே கீழிறங்காது. எனவே, நூறில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படும்.

ஆண் குழந்தை கருவில் இருக்கும்போது, ஒன்பதாவது மாதத்தின்போது விதைகள் கீழிறங்கும். ஆகவே, முழுப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது (100-இல் 3-4 குழந்தைகள்), குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு (100-இல் சுமார் 21 குழந்தைகள்) விதைகள் கிழிறங்காமல் இருப்பது சகஜமே.

விதைகள் கீழிறங்காமல் போவதால் சில அபாயங்களும் உள்ளன (Undescended testicles have some risks such as):

மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு: விதைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்வதற்கு, அவை நம் உடலின் சராசரி வெப்பநிலையை விட 2-3 டிகிரி குறைவான வெப்பத்திலேயே இருக்க வேண்டும். கீழிறங்காத விதைகள் அதிக வெப்பநிலையில் இருப்பதால் விந்தணுக்கள் சரியாக முதிர்ச்சியடையாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் ஆண்களின் குழந்தைபெறும் திறன் பாதிக்கலாம், குறிப்பாக இரண்டு விதிகளுமே இறங்காமல் இருந்தால் இதற்கான வாய்ப்பு அதிகம்.
வளர்ந்த பிறகு விந்தகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
விதிகளுடன் இணைந்திருக்கும் இழைகள் முறுக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது, இதனை விரைச்சிரை முறுக்கம் (டெஸ்டிகுலார் டார்ஷன்) என்பார்கள்.
தொடை இடுக்குப் பகுதிக்கு அருகில் குடலிறக்கம் (ஹெர்னியா) ஏற்பட வாய்ப்புள்ளது
அறிகுறிகள் (Symptoms)

பார்க்கும்போதே, விதைப்பையில் விதைகள் இருக்க வேண்டிய இடத்தில் அவை இல்லாதது நன்கு தெரியும், தொட்டுப் பார்த்தால் அதை உணர முடியும். இவையே பிரதான அறிகுறிகளாகும். விதைகள் கீழிறங்காமல் இருப்பதைக் குறிக்கும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படாது, இந்த நிலையில் வலியும் எதுவும் இருக்காது.

நோய் கண்டறிதல் (Diagnosis)

குழந்தை பிறந்த உடனேயே, குழந்தையின் உடல் ஆய்வு செய்யப்படும்போதே இது கண்டறியப்படும் அல்லது 4-8 வாரங்களில் வழக்கமான பரிசோதனைகள் செய்யப்படும்போது கண்டறியப்படும்.

குழந்தையின் ஆணுறுப்புக்குக் கீழிருக்கும் விதைப்பையைத் தொட்டுப் பார்த்து, விதைகள் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து இந்தப் பிரச்சனை உறுதிப்படுத்தப்படும்.

சில குழந்தைகளுக்கு, கீழிறங்கிய விதைகள், தசைகளின் தன்னியக்கத்தால் மேலிழுத்துக்கொண்டு கீழ் இடுப்புப் பகுதியில் இருக்கும் கால்வாய் போன்ற பகுதிக்குள் சென்று விடக்கூடும். இது வழக்கமாக அதிக குளிர் அல்லது பயத்தால் நடக்கலாம், இப்படி மேலேறும் விதைகள் இயல்பாக பிறகு கீழிறங்கிவிடும். இதப் பார்க்கும்போது விதைகள் கீழிறங்கவில்லை என்று தோன்றக்கூடும். எனினும், மற்ற சமயங்களில் தொட்டுப்பார்த்தால் விதைகள் இருப்பதை உணர முடியும்.

மருத்துவர் இயல்பான உடல் பரிசோதனை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை உறுதிப்படுத்துவார். சிலருக்கு, விதைப்பையில் தொட்டுப்பார்க்கும்போது இல்லாத விதை அடிவயிற்றுப் பகுதியில் இருப்பதை தொட்டுப்பார்த்தால் உணரலாம்.

இன்னும் சிலருக்கு, (5இல் ஒருவருக்கு) இளம் பருவத்தில் அல்லது வளர்ந்த பிறகே இந்தப் பிரச்சனை கண்டறியப்படும்.

சிகிச்சை (Treatment)

ஆறு மாதத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தைக்கு விதைகள் கீழிறங்காமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவை தானாகவே கீழிறங்குகின்றனவா எனப் பார்க்க சிறிது காலம் மருத்துவர்கள் காத்திருப்பார்கள். இந்த வயதுடைய பெரும்பாலான குழந்தைகளுக்கு அது தானாகவே கீழிறங்கிவிடும், சிகிச்சை தேவைப்படாது. 6 மாதங்களுக்கும் அதிக வயதுடைய குழந்தைகளுக்கு விதைகள் கீழிறங்காமல் இருந்தால், சிகிச்சைக்காக அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் செல்லுமாறு பரிந்துரைக்கப்படும்.

ஆர்ச்சிடோபெக்சி (Orchidopexy)

விதைக் கீழிறங்காமல் போகும் பிரச்சனைக்கு, சிறு வயதில் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை ஆர்ச்சிடோபெக்சி அல்லது ஆர்ச்சியோபெக்சி என்று அழைக்கப்படுகிறது. பொதுவான மயக்க மருந்து கொடுத்து, வயிற்றுப் பகுதியில் இருந்து அவற்றின் இயல்பான இடத்திற்கு விதைகளைக் கொண்டு வந்து வைத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, பின்னாளில் பிரச்சனைகள் எதுவும் வருவதில்லை. இவர்கள் வளர்ந்த பிறகு, விந்தகப் புற்றுநோயின் ஆபத்துகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், விந்தக சுய பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

அரிதாக, ஒரு சிலர் வளர்ந்து பெரியவரான பிறகே தனக்கு விதைகள் கீழிறங்கவில்லை என்பதைக் கண்டுகொள்வார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில், விந்தகங்கள் அகற்றப்படலாம் அல்லது வயது, எந்தப் பக்கம் பிரச்சனை மற்றும் மற்ற பக்கம் விதை இயல்பாக உள்ளதா என்பன போன்றவற்றைப் பொறுத்து ஆர்ச்சிடோபெக்சி அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.

ஹார்மோன் ஊசி (Hormone injections)

விதைகள் ஏற்கனவே விதைப்பைக்கு மிக அருகில் இருந்தால், விந்தகங்கள் ஆண் ஹார்மோனை சுரக்கத் தூண்டுகின்ற ஹ்யூமன் கோரியோனிக் கொனடோட்ராஃபின் (hCG) ஹார்மோனை ஊசி மூலம் செலுத்தினால், விதைகள் தானாகவே கீழிறங்க அது உதவக்கூடும்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

உங்கள் குழந்தைக்கு விதைகள் கீழிறங்காமல் இருந்தால், என்னென்ன சிகிச்சைகள் உள்ளன என்று ஆலோசனை பெற உங்கள் மருத்துவரிடம் பேசவும்.