Home குழந்தை நலம் 6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு எந்த வகை உணவுகளை கொடுக்கலாம்

6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு எந்த வகை உணவுகளை கொடுக்கலாம்

25

Captureகுறைந்தது 6 மாத காலம் வரைக்கும் குழந்தைக்கு தாய் பாலினை கொடுக்க வேண்டும். அதன் பிறகு சில மாற்று உணவு வகைகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு 6 மாதங்களின் பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு எப்படியானதாக இருக்க வேண்டும்? என்னென்ன வகையான உணவுகளை அவர்களுக்கு வழங்கலாம்? எதனை தவிர்க்கலாம்? இனிப்புகளை வழங்குவது சரியா? சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு சாப்பிட வைக்கலாம? என எம்மில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்று. நாம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அவர்களுக்கு வழங்கும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்க வேண்டும். அத்துடன் சக்தி செறிவு மிக்கதாகவும் இருத்தல் அவசியம். மேலும் இலகுவில் விழுங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் திரவத்தன்மையான உணவு வகைகளை முதலில் கொடுத்து பழக்குவது மிகவும் சிறந்தது.

மீன் போன்ற உணவு வகைகளைக் கொடுக்கும் போது அவற்றை வேக வைத்து கைகளிலே நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். மீன்களை வழங்கும் போது பெரும்பாலும் முள்ளில்லாத சிறிய ரக மீன்களை கொடுப்பது சிறந்தது. அத்துடன் சுத்தமான பழவகைகளை சாறு பிழிந்தும் அல்லது அரைத்தும் மசித்தும் கொடுக்கலாம்.

ஆனால் இவைகளை ஓர் அளவுக்குத் தான் கொடுக்க வேண்டும். குழந்தை குறித்த ஓர் உணவினை விருப்பவில்லையென்றால் அதனைக் கொடுப்பதை தவிர்த்துக் கொண்டு வேறு உணவுகளை கொடுக்கலாம். அதனை தொடர்ந்து இரு வாரங்களுக்குப் பின்னர் முதலில் குழந்தை உண்ண மறுத்த உணவினை மீண்டும் ஒரு புதிய வடிவில் சமைத்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்று பார்க்கும் போது மிகவும் முக்கியமாக இனிப்பு சுவையுள்ள உணவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது கொழுப்புச் சத்துள்ள உணவுகள். இவ்வகையான உணவுகள் உங்களின் குழந்தைகளை குண்டாக்கச் செய்யும். குழந்தைகள் குண்டாக இருப்பது உண்மையாகவே அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதொன்றல்ல. வயதுக்கேற்ற நிறையும் உடல் அளவும் கொண்டிருப்பது தான் மிகவும் சிறந்தது.

காரணம் குழந்தைகள் பெரும்பாலும் 1 வயதில் எழுந்து நடப்பதற்கு முயற்சிக்கும். அவ்வாறு 1 வயதில் எழுந்து நடக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு இருதயம் பலமிக்கதாக இருக்கும். எதிர்காலத்தில் அக்குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

எனவே நாங்கள் அளவுக்கதிமாக இனிப்பு மற்றும் கொழுப்புச் சுவையுடைய உணவுகளை வழங்குவதால் அவர்களின் உடற்பருமன் அதிகரித்து அவர்களால் இயல்பாக எழுந்திருப்பதோ அல்லது ஏனைய செயற்பாடுகளை செய்வதோ மிகவும் கடினமாக அமைந்து விடும் அல்லவா.

மேலும் ஐஸ்கிரீம், கோதுமை மாவிலான உணவுகளை முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது குழந்தைகளின் நீண்டகால ஆராக்கியத்துக்கு ஏற்ற ஒன்றாகும். அத்துடன் கடல் உணவுகளில் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

காரணம் இவ்வகையான உணவுகளால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை போன்ற சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் செயற்கை சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ, வாசைனையூட்டப்பட்ட உணவு வகைகளையோ கொடுக்க கூடாது.

இவ்வாறான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமான குழந்தைகளாக வளரும்.
எனவே ஒரே தடவையில் நாம் அதிகளவான உணவுகளை வழங்குவதுடன் அவர்கள் கேட்கின்ற தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவதில் தப்பில்லை. அத்துடன் அவர்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு சக்தி மிக்க உணவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.