Home சூடான செய்திகள் வேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் டார்ச்சர்..?

வேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் டார்ச்சர்..?

25

பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதனால் படித்து முடித்த உடனே பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க முன்வருகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? என்பதை பார்ப்போம்!

வேலைக்கு செல்லும் பெண்கள் அதன் மூலம் பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை. வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலையும் அங்கிருந்து பெறுகிறார்கள். அவர்கள் உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிற்சில பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையை பெறுவதோடு மட்டுமில்லாமல், தங்களது அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடவும் கற்றுக் கொள்கின்றார்கள்.

காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வேலையையும் நன்கு திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கவேண்டும் என்று நிறைய சிந்தித்து, சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்திற்கு வேலைகளை முடிக்க குறிப்பிட்ட நேரத்தில்- குறிப்பிட்ட இடத்திலிருந்து செல்லுதல், செல்லும் வழியில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியை கண்டுபிடிக்கும் ஆற்றலும் அவர்களிடம் வளர்கிறது. பயணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தல், பயணங்களில் ஏற்படும் உடல்-உள்ளம் சார்ந்த பிரச்சினைகளை கையாளுதல், பாலியல் தொந்தரவுகளை சமாளித்தல் போன்ற ஆற்றலையும் பெறுகிறார்கள். நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்புகளை சரிவர கையாளும் திறனையும் பெறுகிறார்கள்.

பணிபுரியும் இடத்தில் குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லுதல் போன்றவைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். பணியிடங்களுக்கு வருகைதரும் பொது மக்களிடம் இன்முகத்துடன் பழகவும் கற்றுக்கொள்கிறார்கள். பல தரப்பட்ட சக பணியாளர்களோடு பழகும் திறனையும் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனாலும் பணி இடத்தில் ஆண்களிடையே நட்பு ஏற்படும் பொழுது விவேகத்துடன் நடந்து கொள்ளும் திறன் இன்னும் போதுமானதாக இல்லை. புணிபுரியும் இடங்களில் முதலாளி, உயர் அதிகாரி சமபொறுப்பில் உள்ளவர்களுடனும், தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்களுடனும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவமும் வேலைபார்க்கும் பெண்களுக்கு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதற்கு பெண்கள் தங்களை பல வழிகளில் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

பெண்கள் வேலைக்குச் சென்றால்தான் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும், உலக அனுபவம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும்- முன்பு இருந்த சுதந்திரம் வேலைக்குச் செல்வதால் பறிக்கப்பட்டுவிட்டதாக புலம்பும் பெண்களும் உண்டு.

அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும்போது, பஸ் ஏற காத்திருக்கும்போது, பஸ்- ரெயில்களில் பயணம் செய்யும்போது மனோரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். அத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகும்போது தைரியமாக எதிர்க்கும் திறனை பெறவேண்டும். போலீசில் புகார் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எதிர்க்க தைரியமில்லாதபோது தொந்தரவு கொடுக்கும் நபர்களின் காதில் விழுவது போல் பெரிய அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு தமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தையும் கையாளலாம்.