Home ஆண்கள் விந்தணுக்களை காவு வாங்கும் லேப்டாப்! டாக்டர் எச்சரிக்கை!

விந்தணுக்களை காவு வாங்கும் லேப்டாப்! டாக்டர் எச்சரிக்கை!

30

23எச்சரிக்கை

‘இன்றைய தேதியில், மாணவர்கள் எல்லாவற்றையும் லேப்டாப்பிலேயே செய்து முடித்துவிடுகிறார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் புக்ஸ்’ என்கிற ட்ரெண்ட்
இன்னும் விரிவாகப் போகிறது என்று நிச்சயமாக நினைக்கிறேன்’ என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் ஸ்டீவன் பிங்கர். அதற்கு ஏற்ப தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப்புகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அவசியமோ, இல்லையோ அதை வைத்திருப்பதே ஃபேஷனாகி வருகிறது. சினிமா தியேட்டரில் பாப்கார்ன் கொறிக்கிற இடைவேளையில் கூட மடியில் வைத்து லேப்டாப் உபயோகிக்கிற ஆசாமிகளைப் பார்க்கலாம். அது விந்தணுக்களை பாதித்து, குழந்தை பாக்கியத்தையே தடுத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை… பாவம்!

‘லேப்டாப்போடு ஒரே ஒரு மணி நேரம் செலவழிக்கும் போது அதில் உற்பத்தியாகும் வெப்பம் இடுப்பை தாக்கி, விரைகளின் வெப்பநிலையை அதிகபட்சமாக3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக்கிவிடும். அது மிக மோசமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்’ என்கிறது ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் அறிக்கை ஒன்று.

‘இது சாத்தியம்தானா?’ என்கிற கேள்வியோடு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் சரவணனைஅணுகினோம். ‘‘பொதுவா, விந்தணு உற்பத்தி என்பது சாதாரண டெம்பரேச்சர்லதான் நடக்கும்.

நம்ம விரைகள் உடம்புக்கு வெளியே இருக்கு. உடம்பு டெம்பரேச்சரை விட, விரைகளின் டெம்பரேச்சர் 3லிருந்து 4 டிகிரி செல்சியஸ் கம்மியாத்தான் இருக்கும். அப்படி இருக்கறப்போ, விரைகளின் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாச்சுன்னா விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். செயல்பாடும் ஆக்டிவா இருக்காது. அதன் வால் போன்ற அமைப்புல பிரச்னை ஏற்படும். விந்தணு எண்ணிக்கையில குறைபாடுகள் வரலாம்.

லேப்டாப் வெப்பத்தை உற்பத்தி செய்யுது. மடியில வச்சு அதைப் பயன்படுத்தும் போது 10லிருந்து 15 நிமிடங்கள்லயே விரைகளின் வெப்பம் அதிகமாகிடுது. என்னதான் ‘கூலிங் பேட்’ வச்சு லேப்டாப்பை யூஸ் பண்ணினாலும் விரைகளின் டெம்பரேச்சர் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அதனால இந்தப்பிரச்னைகள் உருவாகலாம்.

ஐ.டி. ஃபீல்டுல இருக்கறவங்கள்ல அதிகமான பேருக்கு இது மாதிரி பாதிப்பு ஏற்படலாம். முக்கியமா அவங்க வேலை பார்க்கற இடத்துல இருக்கும் ‘Wifi’ேலருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் நேரடியா அவங்களை பாதிக்குது. இதனாலயும் டி.என்.ஏ. பாதிக்கப்படறதும் விந்தணுக் குறைபாடுகளும் ஏற்படலாம்’’ என்கிறார் டாக்டர் சரவணன்.

சரி… லேப்டாப் உபயோகிப்பதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா? ‘‘ஆண்மைக் குறைபாடுக்கும் லேப்டாப்புக்கும் சம்பந்தமில்லை. நரம்புகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். அதற்குத் தேவையான ஹார்மோன்ஸ் சாதாரணமா உற்பத்தியாகும். ஆனா, லேப்டாப்பிலிருந்து உற்பத்தியாகும் வெப்பம், விரையை பாதிச்சு, அதன் காரணமாக விந்தணுக்களில் குறைபாடு உண்டாகி குழந்தைப்பேறு இல்லாமல் போகலாம்…’’ லேப்டாப்பால் வேறு என்ன பாதிப்பு ஏற்படலாம்?

‘‘ரொம்ப நேரம் சமையலறையில், சூட்டில் வேலை பார்க்கிறவர்களுக்கு வரும் ‘Varicocele’ங்கிற பிரச்னை வரலாம். அதாவது, விரை நரம்புல வீக்கம் ஏற்படுவது. இதனாலயும் விந்தணு எண்ணிக்கை குறையும். இந்தப் பிரச்னையை மைக்ரோ சர்ஜரி பண்ணி சரி செய்ய முடியும்’’
என்கிறார் டாக்டர் சரவணன்.

ஆண் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு அதிக நேரம் உடலை வெப்பம் தாக்கும் வகையில் உட்கார்ந்திருப்பதும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம்… நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் இதற்கு ஓர் உதாரணம். அதனால், ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் மடியில் வைத்து லேப்டாப்பை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.மேஜை, ஸ்ல் போன்றவற்றில் வைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

லேப்டாப்பிலிருந்து உற்பத்தியாகும் வெப்பம், விரையை பாதிச்சு, அதன் காரணமாக விந்தணுக் களில் குறைபாடு உண்டாக்கி, குழந்தைப்பேறின்மைக்குக் காரணமாகலாம்…