Home பாலியல் மாறிவரும் பூப்பெய்தலும், மாதவிடாய் நிற்கும் காலமும்

மாறிவரும் பூப்பெய்தலும், மாதவிடாய் நிற்கும் காலமும்

24

ஒரு பெண் குழந்தையாக பிறந்து, பூப்பெய்தி, திருமணம் முடிந்து குழந்தைப் பேறு அடைந்து, மாதவிடாய் நிற்பது வரை ஒவ்வொரு கால கட்டமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெண்ணின் வாழ்வில் இவை அனைத்துமே மிக முக்கியத் தருணங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூப்பெய்துதல் என்பது 12 முதல் 15 வயதுக்குள்ளும், திருமணம் என்பது 25 வயதுக்குள்ளும், குழந்தைப் பேறு 30 வயதுக்குள்ளும் நிகழ்ந்து விடுவது நல்லது. மேலும், மாதவிடாய் நிற்பது என்பது 40 வயதுக்கு மேல் நடக்கும் இயற்கையான விஷயமாகும்.

இவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு ஆக வேண்டிய கால கட்டத்தில் நடந்துவிட்டால், உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கமும், உலக வெப்பமயமாகலும், பணிச் சூழலும், பெண்களின் இந்த வளர்ச்சிகளில் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு 15 வயதில் பெண்கள் பூப்படைந்தனர். பிறகு, உணவு மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக பெண்கள் 12 முதல் 13 வயதுக்குள் பூப்பெய்தி வந்தனர். ஆனால் அதிலும் தற்போது மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது, தற்போது பெண்கள் 10 வயதிலேயே பூப்பெய்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உலக அளவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பூமி வெப்பமாவதும் இதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதேப்போல, பெண்கள் அதிகம் படித்து, பணிக்குச் செல்வதால் திருமணத்தை தள்ளிப்போட்டு, அதன் காரணமாக குழந்தைப் பேறும் தள்ளிப் போடப்படுகிறது. பெண்களின் கருப்பை மற்றும் குழந்தைப் பேறுக்கு காரணமாகும் ஹார்மோன்களின் பணி 30 வயது வரை தான் சீராக இருக்கும் என்பதால் அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும் அளவுக்கு வந்துவிட்டது. தற்போது பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள் பெரும் பிரச்னையாக உள்ளது. பூப்பெய்துதல், மாதவிடாய் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாக்கும் இந்த நீர்கட்டிகள், குழந்தைப் பேறு ஏற்படுவதை தடுக்கவும் செய்கின்றன. குழந்தைப் பேறு தள்ளிப் போகும் பெண்களில் பெரும்பாலானோருக்கு இப்பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இது ஏற்பட என்ன மருத்துவக் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது.

மேலும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் மற்றொரு பிரச்னை தலைதூக்கி உள்ளது. அதுதான் மாதவிடாய் நிற்கும் காலம். பொதுவாக 40 வயதில் இருந்து 45 வயதுக்குள் இது நிகழும். ஆனால், எவ்வாறு பூப்பெய்தும் வயது குறைந்து வருகிறதோ, அதேப் போல, மாதவிடாய் நிற்கும் காலமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதில் மிகவும் அச்சப்பட வேண்டிய விஷயமும் ஒன்று உள்ளது. அதாவது, எந்நேரமும் கணினி முன் உட்கார்ந்து பணியாற்றும் பெண்கள் சிலருக்கு 30 வயதுக்குள்ளாகவே மாதவிடாய் நிற்கும் காலம் துவங்கி விடுவதுதான். இது நூறில் ஒன்று என்ற அளவுக்கு நடந்தாலும், உடனடியாக சிகிச்சையும், முறையான உடற்பயிற்சியும் செய்தால் மாதவிடாயை மீண்டும் தொடர வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனினும், பல பெண்கள், திருமணத்தையே 30 வயது வரை தள்ளிப் போடும் நேரத்தில், மாதவிடாய் நிற்கும் காலம், 30 வயதை நோக்கி முன்னேறுவது சற்று கவலை அளிப்பதாக உள்ளது. திருமணம் முடிந்து குழந்தைப் பேற்றை எதிர்நோக்கும் போது, மாதவிடாய் நின்றுவிட்டால், அந்த பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக வாய்ப்பிருக்கிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில், பெண்களின் மனநிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிக கோபம், மன அழுத்ததம் போன்றவை காரணமாக, பெண்களின் பணியும், வாழ்க்கையும் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மருத்துவமனை ஒன்றில் மகளிர் நல பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில் 20 வயதுக்கு மேல், 30 வயதுக்குள் மாதவிடாய் நிற்கும் காலம் ஏற்படுவது அதிகம் இல்லை என்றாலும், ஒரு ஆண்டில் 2 அல்லது 3 பேருக்கு இவ்வாறு ஏற்படுகிறது. நகர வாழ்க்கையும், செயற்கையான, மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பயன்பாடு, அதிக மன அழுத்தம் மற்றும் பல காரணங்களால் இது ஏற்படுகிறது. ஆனால், வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தின் காரணமாக, ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டாலும் கூட, சிகிச்சையின் மூலமாக எளிதாக சரி செய்து விடலாம் என்கிறார் நம்பிக்கையோடு.