Home ஆரோக்கியம் பொது மருத்துவம் மாதவிடாய்க்கு முந்தைய அழுத்தக் கோளாறு – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

மாதவிடாய்க்கு முந்தைய அழுத்தக் கோளாறு – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

30

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நாட்களுக்கு முன்பு தங்கள் மனநிலை அல்லது உடலில் அல்லது இரண்டிலும் சில மாற்றங்களை எதிர்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் லேசானது முதல் மிதமானது வரை இருந்தால், இவற்றை மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் (PMS) என்கிறோம். இருப்பினும், இந்த அறிகுறிகள் தினசரி வாழ்க்கையில் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக இருந்தால், இதனை மாதவிடாய்க்கு முந்தைய அழுத்தக் கோளாறு (PMDD) என்கிறோம்.

காரணங்கள் (Causes)

PMDD பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. எனினும், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு இதில் முக்கியப் பங்குள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆபத்துக் காரணிகள் (Risk factors)

PMDD ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் சில காரணிகள்:

தைராய்டு கோளாறுகள்
மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு
அதிக எடை
குடும்பத்தில் பிறருக்கு இந்தப் பிரச்சனை இருந்திருப்பது
அறிகுறிகள் (Symptoms)

PMDD இன் அறிகுறிகள் PMS அறிகுறிகளைப் போன்றவையே. ஆனால் இவை மிகவும் கடுமையாகவும், தொந்தரவாகவும் இருக்கும், இவற்றுடன் மனநிலை சம்பந்தப்பட்ட ஏதேனும் அறிகுறியும் இருக்கும். வழக்கமாக இந்த அறிகுறிகள் மாதவிடாய்க்கு சுமார் ஒரு வாரம் முன்பு தொடங்கி மாதவிடாய் தொடங்கிய சில நாட்களுக்குள் தானாக சரியாகிவிடும்.

PMDD பிரச்சனையின் சில அறிகுறிகள்:

களைப்பு அல்லது தெம்பின்மை
அன்றாட செயல்களில் ஆர்வம் இல்லாதது
மனக் கலக்கம்
நம்பிக்கையற்ற உணர்வு அல்லது சோகம்
சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது
திடீர் மனநிலை மாற்றங்கள், அத்துடன் அடிக்கடி அழுகை வருவது
பீதியடைதல்
அளவுக்கு அதிகமாக தூங்குதல் அல்லது தூக்கமின்மை
எரிச்சல் அல்லது விளக்க முடியாத கோபம்
தற்கொலை எண்ணங்கள்
வயிற்றுப் பொருமல், தலைவலி, மார்பகம் மென்மையாதல் மற்றும் உடல் வலி
நோய் கண்டறிதல் (Diagnosis)

PMDD பிரச்சனையை உறுதிசெய்யக்கூடிய ஆய்வகப் பரிசோதனை அல்லது உடல் பரிசோதனை எதுவும் இல்லை. பிற மருத்துவப் பிரச்சனைகள் இல்லை என உறுதிப்படுத்துவதற்காக, மருத்துவர் உங்கள் முழுமையான மருத்துவ வரலாற்றை மதிப்பீடு செய்வார், தைராய்டு செயல்பாட்டு சோதனைகளையும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பார்.

ஒரு மனநல மதிப்பீட்டு சோதனையும் இந்தப் பிரச்சனை இருப்பதை உறுதிப்படுத்த உதவக்கூடும். அவ்வப்போது தோன்றும் அறிகுறிகளைப் பற்றி நாட்குறிப்பேட்டில் தொடர்ந்து பதிவுசெய்து வந்தால், என்னென்ன அறிகுறிகள் எப்போது ஏற்படுகின்றன, எவ்வளவு கடுமையாக உள்ளன என்பது பற்றிக் கண்டுகொள்ள உதவியாக இருக்கும். PMDD-க்கு சிறந்த சிகிச்சை விருப்பங்களைக் கண்டறியவும் ஆலோசனை வழங்கவும் இந்தத் தகவல் மருத்துவருக்கு உதவும்.

சிகிச்சை (Treatment)

PMDD-க்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. சிகிச்சையின் நோக்கம் மற்றும் அறிகுறிகளை சமாளிப்பது மற்றும் குறைப்பதாகவே இருக்கும். அவற்றில் சில:

மாதாந்திர அறிகுறிகள் குறிப்பேட்டைப் பராமரித்தல்: மாதந்தோறும் அறிகுறிகளைக் குறித்து வைத்துக்கொண்டால், அந்த விளக்கப்படம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அதுமட்டுமின்றி சிகிச்சையிலும் உதவக்கூடும். இது நோயறிதலுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அறிகுறிகளை சிறந்த முறையில் சமாளிக்கவும் பெண்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது PMDD பிரச்சனையைச் சமாளிக்க சிறந்த தீர்வாகும். வாழ்க்கை முறைகளில் செய்யக்கூடிய சில மாற்றங்கள்:

முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது
உப்பு, சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்தல்
மது மற்றும் காஃபின் பொருள்களைத் தவிர்த்தல்
மாதம் முழுவதும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது
ஆன்டிடிப்ரசன்ட் மருந்துகள்: மனக்கலக்கம், சோகம், எரிச்சல் மற்றும் திடீர் மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகளைக் குறைப்பதற்காக மருத்துவர் இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளை மாதம் முழுதும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது மாதவிடாய் தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

கருத்தடை மாத்திரைகள்: மாத்திரை சாப்பிடத் தேவையற்ற நாட்கள் உள்ள அல்லது இல்லாத கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, ஹார்மோன்களின் சமநிலை மாறுவதைக் குறைத்து PMDD அறிகுறிகளைத் தணிக்க உதவக்கூடும்.

ஊட்டச்சத்து மருந்துகள்: வைட்டமின் B6 மற்றும் கால்சியம் போன்ற சில கூடுதல் ஊட்டச்சத்து மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

உளவியல் சிகிச்சை மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை: இந்த சிகிச்சைகள் PMDD இன் உளவியல் அறிகுறிகளைத் தணிப்பதில் உதவக்கூடும்.

சிக்கல்கள் (Complications)

PMDD பிரச்சனையால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் சில:

பெண்களின் அன்றாட வாழ்வில் குறுக்கீடு
முன்பே மன இறுக்கம் இருந்த பெண்களுக்கு, அறிகுறிகள் மோசமடையலாம்
PMDD பிரச்சனை, சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் மற்றும் போதை மருந்து உபயோகம் போன்ற பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கலாம்.
மன அழுத்தம் மிகவும் கடுமையாக ஆகிவிடும், அது தற்கொலைக்கும் பெண்களைத் தூண்டக்கூடிய அளவில் இருக்கலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

PMDD பிரச்சனை உள்ளதாக நீங்கள் கருதினால்:

அறிகுறிகள் எப்போது தோன்றுகின்றன, எப்படி உள்ளன என்பது குறித்து ஒரு நாட்குறிப்பேட்டில் தொடர்ந்து குறித்துக்கொள்ளவும்.
உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முயற்சிக்கவும்.
அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுமாயின் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
எச்சரிக்கை (Red Flags)

பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்:

பீதியடைதல் அல்லது அதீத எரிச்சல்
தற்கொலை எண்ணங்கள்
PMDD ஏற்படுவதற்கு அந்தப் பெண்ணின் தவறோ, ஆளுமையின் பலவீனமோ அல்லது நிலையற்ற தன்மையோ காரணமல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். PMDD என்பது ஒரு மருத்துவப் பிரச்சனையாகும். அது 3% முதல் 8% பெண்களைத் தாக்குகிறது. மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் இதன் அறிகுறிகளை நிர்வகிக்க முடியும் என்பதே நல்ல விஷயம்! அத்துடன் மருத்துவரின் ஆலோசனையும் மேற்பார்வையும் மேலும் உதவும்!