Home ஆரோக்கியம் மலச்சிக்கல் சரியாக சில பயனுள்ள குறிப்புகள்

மலச்சிக்கல் சரியாக சில பயனுள்ள குறிப்புகள்

36

எல்லா ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் இருக்கும், சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்: கோதுமை முளை, முழு கோதுமை, புல்லரிசி மாவு, பழங்கள், உலர் பழங்கள், காய்கறிகள், தவிடு, பட்டாணி வகைகள், கொண்டைக்கடலை போன்றவையாகும். நார்ச்சத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது, மலக்குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொள்வதில் நார்ச்சத்துக்கு முக்கியப் பங்குள்ளது. நார்ச்சத்து என்பது, நாம் உண்ணும் தாவர உணவுகளில் இருக்கும் ஒரு பகுதியாகும், அதனை நம் உடலால் செரிக்க முடியாது. இதனால் மலத்தின் அளவு அதிகரிக்கும், மலம் மென்மையாகும், குடலில் மலம் சிரமமின்றி நகர்ந்து வெளியற உதவும், இதனால் கஷ்டப்பட்டு மலம் கழிக்கும் பிரச்சனை குறையும். நார்ச்சத்துகள் இருப்பதால், உணவு குடல் பாதையில் பயணிக்கும் நேரம் குறைகிறது. இதனால் தீங்கு விளைவிக்கின்ற, கழிவுப் பொருள்கள் குடல் பாதையைத் தொட்டுக்கொண்டிருக்கும் நேரம் குறைகிறது. வேதிச் செயல்முறைகளுக்கு உட்படுத்திய உணவுகள், பால் பொருள்கள், காஃபின் ஏற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

நாம் சாப்பிடும் உணவை ஈரமாக்கி, அது உடலுக்குள் அதன் பாதையில் எளிதாக தடையின்றி செல்ல நீர் உதவுகிறது. ஆகவே அதிகம் நீர் பருகவும். ஒரு நாளில் குறைந்தது 8 டம்ளர் நீர் பருகுவது நல்லது.
வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு முறை, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வது, குடல் தசைகளை நன்றாகச் செயல்படத் தூண்டுகிறது, குடலில் உணவு பயணிக்கும் நேரத்தைக் குறைக்கிறது, இதனால் மலம் மென்மையாகவே இருக்கும்.
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவர்கள் பெரும்பாலும் நேரத்திற்கு உணவு உட்கொள்ளமாட்டார்கள்,உடற்பயிற்சி செய்வது குறித்தோ, சத்துள்ள உணவு உட்கொள்வது குறித்தோ அக்கறையாக இருக்க மாட்டார்கள். மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளைக் கண்டறிந்து பின்பற்றி, மண் அழுத்தத்தைக் குறைக்கவும்.
மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது, அதனைக் கண்டுகொள்ளாமல் தள்ளிப்போடக்கூடாது. தினமும் குறித்த நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பயணம் செய்யும்போது, அதிகம் நீர் பருக வேண்டும்,
குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படலாம் எனில், டோசை குறைக்க முடியுமா அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தாதபடி வேறு மருந்தைப் பரிந்துரைக்க முடியுமா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
சிகிச்சை (Treatment)
உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்யலாம். இவையும் பலனளிக்காவிட்டால், உங்கள் மருத்துவர் மருந்து அல்லது அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கலாம்.

எப்போதாவது மருந்து கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் மலமிளக்கிகளைப் பயன்படுத்தலாம் என்றாலும், அதையே பழக்கமாக்கிக்கொள்ளக் கூடாது. எளிய வீட்டு வைத்திய முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம், கொய்யா, திரிபலா சூரணம், ஆளிவிதைகள் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதே மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணமளிக்கும்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
நாள்பட்ட மலச்சிக்கல், மூலநோய், ஆசனவாய்ப் பிளவுகள், மல அடைப்பு, மலக்குடல் பிதுக்கம் போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால் அதனைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. மலச்சிக்கல் அதிக நாட்கள் நீடித்தால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.