Home உறவு-காதல் போலித்தனம்.. பொறாமை.. சதி.. கவலைப்படவைக்கும் கலகத்தோழிகள்

போலித்தனம்.. பொறாமை.. சதி.. கவலைப்படவைக்கும் கலகத்தோழிகள்

21

Captureஇனிக்க இனிக்கப் பேசுபவர்களின் பாசாங்கு புரியாமல், பாதாளத்தில் விழுந்து கிடக்கும் உறவுகள் பல. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தவறான நட்பு வட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும்.

நல்ல நட்பையும், பாசாங்கு பழக்கத்தையும் கண்டுபிடிப்பது எப்படி என்று, நவீன ஆய்வுகள் நமக்கு வழிகாட்டுகின்றன!

‘நல்ல நட்பு ஆயுளை பெருக்குகிறது. பாசாங்கு செய்து பழகுபவர்களின் ஆயுள், அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தால் குறைகிறது’ என்கிறது, ஆய்வு. பாசாங்கு பல்வேறு உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும், மனஅழுத்தத்தையும் வெகுவாக உயர்த்துகிறது.

சரி, யார்– யார், எப்போது பாசாங்கு தோழிகளாக மாறுவார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பிரச்சினை ஒன்று :

சிலர் ரொம்ப நல்ல தோழிகள்போன்று பழகிக்கொண்டிருப்பார்கள். படிப்பிலோ, வேலையிலோ, பதவியிலோ அவர்களுடன் போட்டி என்று வரும்போதுதான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியவரும். அப்போது பொறாமையுடன் செயல்பட்டு உங்களை அழிக்கும் செயலில் ஈடுபடுவார்கள்.

நீங்கள் எதிர்பார்த்து காத்திருப்பது கிடைக்காமல் போகும்போதோ, உங்கள் வாழ்க்கையில் சறுக்கல் ஏற்படும்போதோதான், அதற்கு அந்த தோழிதான் காரணம் என்பது புரியவரும். பல சமயங்களில் அனைத்தும் கைநழுவி இழப்பு ஏற்பட்ட பிறகுதான், இவர்களின் விலங்கு குணத்தை அறிய முடியும்.

தீர்வு :

இப்படிப்பட்டவர்கள் உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் அக்கறை
காட்டுபவர்கள் போல அறிந்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். குறிப்பாக நமது அந்தரங்க பக்கங்கள், நெருக்கமான ரகசிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். தங்களின் பாதுகாப்பற்ற நிலை அல்லது இயலாமையை உணர்ந்தவர்களே இப்படி மற்றவர் விஷயங்களில் தலையிடுபவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவை உருவாக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருந்து விலகிவிடவேண்டும்.

பிரச்சினை இரண்டு :

சிறுவயதில் இருந்தே உங்களிடம் ஒருதோழி நட்பாக பழகினால் அவள் மீது உங்களுக்கு அதிக நம்பிக்கை வந்துவிடும். இருவரும் இளம் பருவத்தை அடையும்போது, அவளின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். காலப்போக்கில் எல்லோருக்குமே நட்பு வட்டம் விரியும். அப்போது சில பெண்கள் அதை தவறாக புரிந்துகொண்டு, ‘இனி அவள் நம்மோடு நட்பு பாராட்டமாட்டாள். அதனால் முடிந்த அளவுக்கு அவளுக்கு குழிபறிக்கலாம்’ என்று நினைப்பார்கள். அப்போது உங்களை பற்றி தெரிந்த ரகசியங்களை வெளிப்படுத்தும் நிலைக்கும் செல்லலாம்.

தீர்வு:

பருவ மாற்றம் அடையும்போது அல்லது புதிய நட்பு வட்டாரம் ஏற்படும்போது சிலரது ஆளுமைகள் அப்படியே மாறக்கூடும். இதனால் உங்கள் நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சியற்ற சூழலும், தொல்லைகளும் அதிகரிப்பதாக தெரிந்தால், முதலில் பேசிப் பார்க்கலாம். இல்லாவிட்டால் உறவை துண்டித்துக் கொள்வது நல்லது. தோழி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துபோகிறாளோ அந்த அளவுக்கு நீங்களும் தரம் இறங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பிடிக்காவிட்டால் நல்லபடியாக பேசி அந்த நட்புக்கு விடைகொடுத்து விடுங்கள்.

பிரச்சினை மூன்று :

உங்களுக்கு எதிரான விஷயங்கள் இறக்கைகட்டி பறக்கும். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தேவையற்ற பழக்க வழக்கங்களை உங்களுக்கு அறிமுகமாக்கி உங்கள் கவுரவமும், உடல் நலமும் பாதிக்கப்படும். உங்களுக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களால்தான், தேவையில்லாத பழக்கவழக்கங்களில் உங்களை ஈடுபடுத்த முடியும். நீங்கள் நல்லவர்களாக நம்பிக்கொண்டிருக்கும் அவர்களே, உங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பார்கள். மது, புகை, தவறான சேர்க்கை போன்ற பிரச்சினைக்குரிய விஷயத்தை உங்களுக்கு சரியென்று கற்பித்து, அதனை அறிமுகப்படுத்தியவரே அந்த தோழியாக இருக்கும். எதுவுமே தவறு இல்லை என்று கற்பித்துவிடும் இது போன்ற தோழிகளால் தவறான பாதையில் பயணிப்பவர்கள் அதிகம். அவர்தான் காரணம் என்பதை உணரமுடியாமலும், அந்த பாதையில் இருந்து விலகமுடியாமலும் நீங்கள் தவிக்கக்கூடும்.

தீர்வு :

குழந்தைப்பருவம் அல்லது வளர் இளம் பருவத்தில் சில பெண்கள், தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான வழிநடத்தலால் பாதை மாறிப்போவதுண்டு. அவர்கள் தாங்கள் தவறான பாதையில் செல்கிறோம் என்பதை உணராமலே, தங்கள் வழியில் மற்றவர்களையும் இழுத்து ஆசைகாட்டி மோசமாக்கிவிடுவார்கள். இன்பமோ, கிளர்ச்சியோ, பொழுதுபோக்கோ, பணமோ.. ஏதோ அப்போது கிடைக்கக்கூடும்.

‘இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் தப்பில்லை. யாரும் யோக்கியம் இல்லை. எல்லோரும் நம்மைவிட மோசமானவர்கள்தான்’ என்று மூளைச்சலவை செய்யும் எந்த தோழியிடமும் நெருங்கிவிடாதீர்கள். அவர்கள் ஆபத்தானவர்கள்.

இப்படிப்பட்ட தோழிகள் முதலில் உங்களை ஆழம் பார்ப்பார்கள். குடும்ப பிரச்சினைகளால் நீங்கள் மனதொடிந்துபோயிருக்கலாம். இழப்புகளால் நீங்கள் சோகத்தில் சிக்கியிருக்கலாம். பெரிய அளவில் பொருளாதார சிக்கலில் நீங்கள் மாட்டியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் உங்களை அத்தகைய தோழிகள் நெருங்குவார்கள்.

உங்களது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தந்து, நம்பிக்கையூட்டுவதற்கான செயல் அது என்று போதைப் பொருள் பழக்கம் போன்ற ஏதாவது ஒன்றில் உங்களை கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய லாபங்கள் இருக்கும். அதை மறைத்து உங்களுக்கு நல்லது செய்வதுபோல் நடிப்பார்கள். இதனால் மனஅழுத்தமும், உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். உறவு முறிவுகளும் நடக்கலாம். சமூக குற்றங்களும் கூட அரங்கேறலாம்.

சமூகம் புறக்கணிக்கும் தவறான விஷயங்களை, தவறல்ல என்று கூறிக்கொண்டு அதை அனுபவிக்க வலியுறுத்தும் நட்பு வட்டாரத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்பம் என்ற பொறி வைத்து வாழ்வை சீர்குலைக்கும் நட்பை ஆரம்பத்திலேயே துண்டிப்பது எதிர்காலத்திற்கு நல்லது. பாதிப்பை சந்தித்தவர்கள் கவுன்சலிங் பெற்று மீளலாம்.

பிரச்சினை நான்கு :

‘உன் திறமைக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும். இதை உதறித்தள்ளு’ என்று நயவஞ்சகமாகப் பேசி, இருக்கிற வேலையையும் இழக்கவைக்கிற தோழிகளும் இருக்கிறார்கள். இப்படி வேலைக்கு வேட்டு வைப்பது மட்டுமல்ல, காதலுக்குள் புகுந்து ‘உன் காதலன் மோசமானவன். நான் வேணும்னா அவனோடு நெருங்கிப் பழகி, அவன் அப்படிப்பட்டவன்தான் என்று நிரூபித்துக்காட்டட்டுமா?’ என்று பேசி, குழப்பி, அந்த காதலுக்கே சமாதி கட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

தீர்வு:

இப்படிப்பட்ட தோழிகளை அடையாளம் காணுவது சற்று கடினம்தான். ஏன்என்றால் நீங்கள், முக்கியமான விஷயங்களில் ஆலோசனை கேட்கும் அந்தஸ்தை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருப்பீர்கள். எப்படி பேசினால் உங்களை நம்பவைக்க முடியும் என்ற அனுபவமும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் வளர்ச்சி பிடிக்காத இவர்கள் நீங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம், முரண்பாடான ஆலோசனைகளை கூறி உங்களை கவிழ்ப்பார்கள். அடையாளம்கண்டு அவர்களை ஒதுக்கிவிடுங்கள்.