Home பாலியல் பெண்களுக்கான மாதவிடாய் கால உணவுகள்

பெண்களுக்கான மாதவிடாய் கால உணவுகள்

39

மாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். சில பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கிவிடும். அப்போது தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, கை, கால் வலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

உடலில் சோர்வும் எட்டிப்பார்க்கும். முகப்பருக்களும் சிலருக்கு தோன்றும். ஆர்வமின்மை, கவனக்குறைவு, முன்கோபம், மனஅழுத்தம் போன்ற வைகளும் ஏற்படக்கூடும். தூக்கமின்றி அவதிப்பட நேரிடும். இது வழக்கமானதுதான். மாதவிடாய் நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும்.

அந்த காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உணவு விஷயத்தில் பெண்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடாமல் உணவை நான்கு, ஐந்து முறையாக பிரித்து சாப்பிடவேண்டும். எளிதில் ஜீரணமாகும், சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவில் உப்பின் அளவையும் குறைக்கவேண்டும். உப்பு அதிகம் சேர்த்து பதப்படுத்தப்படும் ஊறுகாய் வகைகள், பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் சமயங்களில் இஞ்சி டீ பருகுவது நல்லது.

அது வலியை கட்டுப்படுத்த உதவும். சத்தான காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், பழங்களை சாப்பிட வேண்டும். பால் பருகி வருவதும் நல்லது. மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ப்ராக்கோலி, சோளம், எலுமிச்சை, ஆரஞ்சு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வருவது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. அவைகளை சாப்பிட்டு வருவது நல்ல மனநிலைக்கு பெண்களை கொண்டுசெல்லும். குடல் இயக்கத்திற்கும் நலம் சேர்க்கும். கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளடக்கிய உணவுகளையும் சாப்பிட வேண்டும். அவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த துணை புரியும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்துவர வேண்டும். அவை தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச் சினைகளை தவிர்க்க உதவும்.