Home பாலியல் பால்வினை நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பரிசோதனைகள்

பால்வினை நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பரிசோதனைகள்

43

பாலியல் தொடர்பின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோய்த்தொற்றுகளை பால்வினை நோய்த்தொற்றுகள் (STI) என்கிறோம். ஆகவே, இத்தகைய நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பு வழிப் புணர்ச்சி, குதவழிப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி என எல்லா வகை பாலியல் தொடர்புகள் மூலமாகவும் பரவக்கூடும். பால்வினை நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்டிருக்காது அல்லது அவற்றின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். குறிப்பாக நோய்த்தொற்று தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் பெரிதாகத் தெரியாது. இதனால் பலர் அவற்றைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பிறகு கவலைப்படுவார்கள்.

ஆகவே, பால்வினை நோய்த்தொற்றுகள் ஏதேனும் உங்களுக்கு உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில:

பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொண்டால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
புதிய இணையருடன் உடலுறவில் ஈடுபட்டால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
ஒன்றுக்கு மேற்பட்டோருடன் பாலியல் உறவு வைத்திருந்தால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
உங்களுக்குப் பால்வினை நோய்த்தொற்று பரவிவிட வாய்ப்புள்ளது என்று அஞ்சும்படி ஏதேனும் செய்திருந்தால், சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
நீங்கள் பாலியல் உறவு வைத்திருக்கும் இணையருக்கு பாலியல் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
பால்வினை நோய்த்தொற்று உங்களுக்குப் பரவிவிட்டிருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், அது உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்வதே, உங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் உங்கள் இணையரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சிறந்த வழியாக இருக்க முடியும்.

பாலியல் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் (What are the symptoms of STIs?)
பால்வினை நோய்த்தொற்றுகள் ஒருவருக்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தக்க சில அறிகுறிகள்:

ஆண்களுக்கு:

ஆண்குறியில் இருந்து சீழ் அல்லது ஏதேனும் திரவம் வெளியேறுதல்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இனப்பெருக்க உறுப்புகளில் புண், தடிப்பு அல்லது அரிப்பு
இடுப்பு தொடை நரம்பு வீக்கம்
கவட்டில் வீக்கம்
குழந்தையின்மை
பெண்களுக்கு:

பெண்ணுறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெள்ளைப்படுதல் (அதிக அளவில் வெள்ளைப்படுதல், வழக்கத்திற்கு மாறான நிறம் அல்லது நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்)
இனப்பெருக்க உறுப்புகளில் புண், தடிப்பு அல்லது அரிப்பு
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்
அடிவயிற்றில் வலி
கடுமையான வலியுடன் மாதவிடாய் (டிஸ்மெனோரியா), மாதவிடாய் மிகைப்பு (மெனோராஜியா), சீரற்ற மாதவிடாய் சுழற்சி
குழந்தையின்மை
எந்தெந்த நோய்த்தொற்றுகளுக்காக பரிசோதனைகள் செய்யப்படும்? (Which are the infections for which testing are performed?)
இந்தியாவில், பின்வரும் பால்வினை நோய்த்தொற்றுகளுக்காக பரிசோதனைகள் செய்யப்படும்:

வெட்டை நோய் (கொனோரியா)
சிவிலிசு நோய்
கிளாமீடியா
ட்ரைக்கோமோனியாசிஸ்
இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் அக்கி நோய்
எயிட்ஸ் (HIV)
ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கும் இடையே மருக்கள்
ஹெப்படைட்டஸ் B
ஹெப்படைட்டஸ் C
பால்வினை நோய்த்தொற்றுகள் எப்படிக் கண்டறியப்படுகின்றன? (How are STIs detected?)
நோய்த்தொற்றின் வகையைப் பொறுத்து பரிசோதனைகள் அமையும்.

உடல் பரிசோதனை: ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கும் இடையே மருக்கள் போன்ற பிரச்சனைகள், உடலை ஆய்வு செய்வதன் மூலமே கண்டறியப்பட்டுவிடும், அவற்றுக்கு குறிப்பிட்ட ஆய்வகப் பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது.

பஞ்சு உரசி செய்யப்படும் சோதனை (ஸ்வாப் டெஸ்ட்): கிளாமிடியா, கொனோரியா மற்றும் ட்ரைக்கோமோனாஸ் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு பஞ்சு உரசி செய்யப்படும் ஸ்வாப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம். முனையில் பந்து போன்று பஞ்சு சுருட்டப்பட்டிருக்கும் மெல்லிய குச்சி போன்ற பொருளே ஸ்வாப் எனப்படும். இது பார்ப்பதற்கு காது குடையும் பட்ஸ் போல் இருக்கும். உடலின் பரப்பில் பல்வேறு பகுதிகளில், இந்த ஸ்வாப் குச்சியைக் கொண்டு லேசாகத் உரசித் தேய்த்து எடுப்பார்கள், இதன் மூலம் சீழ், இனப்பெருக்க உறுப்பில் இருந்து அல்லது பிற பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள திரவம் அல்லது சில செல்கள் உரசி எடுக்கப்படும். ஆண்குறி, பெண்ணுறுப்பு, மலக்குடல் அல்லது தொண்டை போன்ற பகுதிகளில் இப்படி உரசி மாதிரி எடுக்கப்படலாம். இவ்வாறு சேகரிக்கப்படும் மாதிரி ஒரு நுண்ணோக்கியின் கீழ் சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

இரத்தப் பரிசோதனைகள்: HIV, சிஃபிலிஸ், ஹெப்படைட்டஸ் B மற்றும் C ஆகிய நோய்த்தொற்றுகளுக்கு, பொதுவாக இரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

சிறுநீர்ப் பரிசோதனைகள்: சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் உள்ளதா எனக் கண்டறிவதற்காக சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்யப்படலாம். கிளாமிடியா போன்ற நோய்த்தொற்றுகளை சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

இந்தப் பரிசோதனைகளை எங்கு செய்வது? (Where can you get tested for STIs?)
நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான தகுந்த சோதனைகளைப் பரிந்துரைக்குமாறு கேட்க, உங்கள் பொது மருத்துவரிடம் செல்லலாம் அல்லது பால்வினை நோய்த்தொற்றுகளுக்கான சிறப்பு மருத்துவரிடம் (இந்தியாவில் பெரும்பாலான சருமவியல் மருத்துவர்கள் பால்வினை நோய்த்தொற்றுக்கும் சிறப்பு மருத்துவம் பார்ப்பவர்களாக உள்ளனர்) செல்லலாம் அல்லது சிறுநீரகவியல் மருத்துவர் (யூராலஜிஸ்ட்) அல்லது மகளிர் நலவியல் மருத்துவரிடம் (கைனக்காலஜிஸ்ட்) செல்லலாம். சிறப்பு மருத்துவர்களைப் பரிந்துரைக்காமல் பொது மருத்துவர்கள் பலரும், இந்த பரிசோதனைகளை செய்யவும், சிகிச்சையளிக்கவும் முடியும்.

இந்தியாவில் தேசிய பால்வினை நோய்த்தொற்றுகள் / இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் திட்டம் உள்ளது. மாவட்ட மருத்துவமனைகளிலும் STI மருத்துவப் பிரிவுகள் உள்ளன, மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த கல்வி கற்பிக்கும் மருத்துவமனைகள் உள்ளன, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன, சமூக சுகாதார மையங்களும் உள்ளன.

இந்த மையங்களுடன் இணைந்திருக்கும் ஏதேனும் ஆய்வகத்திலோ அல்லது தனியார் ஆய்வகத்திலோ இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளலாம். HIV சோதனைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்ட சம்மதப் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டியிருக்கும்.

பால்வினை நோய்த்தொற்று இருப்பதாக சோதனை முடிவு வந்தால்? (What if the tests show that you have a sexually transmitted infection?)
உங்களுக்கு பால்வினை நோய்த்தொற்று ஏதேனும் இருப்பதாக, பரிசோதனை முடிவுகள் தெரிவித்தால், அதற்கான சிகிச்சை மற்றும் மேற்படி நடவடிக்கை குறித்து உங்கள் மருத்துவர் அறிவுரை வழங்குவார். உங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களையும் பரிசோதனை செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளுமாறு மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். மருத்துவர் அறிவுறுத்தும் வரை, பாலியல் உறவில் ஈடுபடாமல் தவிர்க்கவும்.

அடுத்து செய்ய வேண்டியவை (What are the Next Steps?)
பால்வினை நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையையும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளையும் ஒருவர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சையானது, என்ன வகை நோய்த்தொற்று கண்டறியப்பட்டது என்பதைப் பொறுத்து அமையும். வெட்டை நோய், சிஃபிலிஸ், ட்ரைக்கோமோனாஸ் மற்றும் கிளாமிடியா போன்றவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படலாம்.

ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் தோன்றும் மறுக்கலை அழிக்க அல்லது போக்க, கெமிக்கல் அல்லது ஃபிசிக்கல் சிகிச்சை அளிக்கப்படலாம்.