Home குழந்தை நலம் குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது

குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது

31

imagesமுதலில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் எடுத்து வைத்துக் கொள். குழந்தைக்கு தேய்க்க வேண்டிய எண்ணெய், சோப்பு, அல்லது சிகைக்காய் பொடி, குழந்தையை துடைக்க டவல். நீ உட்கார மணை.

இரண்டு பக்கெட்டுகளில் நீர் பிடித்து வைத்துக் கொள். ஒன்று நல்ல சூடாக இருக்கட்டும். இன்னொன்று உன் கை பொறுக்கும் சூட்டில் இருக்கட்டும். எல்லா சாமான்களையும் உன் கை எட்டும் தூரத்தில் வைத்துக்கொள். வேண்டும்போது சூடு தண்ணீர்விட்டு விளாவிக் கொள்ளலாம்.

முதலில் குழந்தையை நிமிர்த்தி கால்களின் மேல் விட்டுக் கொள். மேல் கால்களில் சிறிது இடைவெளி விட்டு குழந்தையின் தலையை ‘கிளிப்’ மாதிரி பிடித்துக் கொள். இதனால் உன் கைகள் இரண்டையும் பயன்படுத்தலாம். எண்ணையை சூடுபடுத்திக் கொண்டு ஆறியவுடன் (இதை முதலிலேயே செய்து கொள்ள வேண்டும்) குழந்தையின் முகம், மார்பு, வயிறு, கால்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தடவு.

மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி கழுத்தில் எண்ணெய் தடவு. மெதுவாக குழந்தையை எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து விட்டுக் கொள். முன்பு போலவே கால்களால் குழந்தையின் தலையை அசையாமல் பிடித்துக் கொள். குழந்தையின் பின்னந்தலை, கழுத்தின் பின்புறம், முதுகு, பிருஷ்ட பாகம், பிருஷ்ட பாகத்தை கொஞ்சம் அகலப் படுத்தி வெளிக்குப் போகுமிடம், பின்னங்கால்கள் என்று நிதானமாக எண்ணையை தடவு. தடவும்போதே மஸாஜ்செய்வதுபோல மெல்ல கைகளால் அழுத்தி தடவு. குழந்தை கவிழ்ந்தே படுத்திருக்கட்டும்.

அடுத்தாற்போல ‘மக்’கில் நீர் எடுத்து முதலில் குழந்தையின் தலை மேல் ஊற்ற வேண்டும். குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பதால் முகத்தில் நீர் விழாது. ஆனாலும் ஜாக்கிரதைக்காக இடது கையை குழந்தையின் நெற்றிப் பக்கம் வைத்துக் கொண்டு நீரைக் கொட்டி நீரை அப்படியே பின்பக்கமாக வழித்து விட்டுவிட வேண்டும்.

இப்போது குழந்தையின் தலைக்கு மட்டும் சிகைக்காய் பொடி தேய்க்கலாம். இந்தக் காலத்தில் எந்த மருத்துவருமே இதை பரிந்துரைப்பதில்லை. அதனால் உடலுக்கு போடும் சோப் அல்லது பேபி ஷாம்பூ போடலாம். தலைக்கு நீரை விட்டு நன்றாக அலசியபின் தலையை நன்றாகத் துடைத்துவிடு. இப்போது குழந்தையை மறுபடி நிமிர்த்தி விட்டுக் கொண்டு முதலில் முகத்திற்கு சோப்பு போடவேண்டும்.

குழந்தையின் உடம்பில் சோப்பைப் போட்டுத் தேய்க்காமல் கைகளில் சோப்பை எடுத்துக் குழைத்துக் கொண்டு நெற்றி, கன்னங்கள், கழுத்து என்று தடவி, கைகளால் நீரை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கண்களில் நீர் போகாமல் முகத்தை அலம்ப வேண்டும். உடனே முகத்தையும் டவலால் துடைத்து விடவேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைக்கு சளி பிடிக்காது. பிறகு உடம்பிற்கு சோப் தடவி – இப்போது தாராளமாக நீரை விடலாம். கழுத்துப் பகுதி, தொடைகளின் இடுக்குகளிலும் நீர் விட்டு குளித்து விடவேண்டும்.

நன்றாகத் துடைத்து குழந்தையை டவலில் சுற்றி வெளியே கொண்டு வா. குளியலறை அமர்க்களங்களை குழந்தையை தூங்கப் பண்ணிய பிறகு சரி படுத்தலாம்.

என் அம்மாவின் வார்த்தைகளிலேயே குழந்தையை நீராட்டியாயிற்று. இப்போது சில கேள்வி பதில்கள்:

எந்த நேரத்தில் குழந்தையை நீராட்டலாம்?

சென்னை போன்ற இடங்களில் 9 அல்லது 10 மணிக்கு நீராட்டலாம். பெங்களூர் போன்ற இடங்களில் சற்று வெய்யில் வந்தவுடன் நீராட்டலாம்.

சிலர் மதியம் 12 மணிக்கு நீராட்டுவார்கள். பொதுவாக மாலை வேளைகளில் நீராட்டுவது இல்லை. குழந்தைக்கு காலை 10 மணிக்கு ஒரு முறை பால் கொடுக்கிறீர்கள் என்றால், அடுத்த பசி வேளை வருவதற்குள் நீராட்டி விடுங்கள். நீராட்டத்திற்கு பின் குழந்தை தூங்கும். அதனால் நீராட்டிவிட்டு, பாலூட்டி தூங்கப் பண்ணினால் இளம் தாய்க்கும் சற்று ஓய்வு கிடைக்கும்.

குழந்தையை தினமும் நீராட்ட வேண்டுமா?

நிச்சயமாக. தினமும் நீராட்ட வேண்டும். தாயின் வயிற்றில் இருக்கும் போது நீரில் இருப்பதால் பிறந்தவுடன் சற்று பூசினாற்போல இருக்கும் குழந்தை பிறகு எடை குறையும். இதனை ‘அரை வற்று’ என்பார்கள். எடை குறைவதுடன், மேல் தோல் உரிந்து வறண்டு விடும். கை கால்கள் எல்லாம் குச்சி குச்சியாக ஆகிவிடும். குழந்தையின் சருமம் பழையபடி ஆக இந்த தினக் குளியல் ரொம்பவும் உதவி செய்யும். எண்ணெய்யும் தண்ணீரும் படப்படத்தான் குழந்தை தேறும்.

ரொம்பவும் குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீராட்டலாம்.

எந்த எண்ணெய் சிறந்தது?

நான் என் குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் வெறும் பேபி சோப், பவுடர் மட்டும்தான் இருந்தன. இப்போது குழந்தைக்கென்று சகலமும் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம். எண்ணெய் சற்று சூடு படுத்தி விட்டு உபயோகித்தால் குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கும்.

எந்த சூட்டில் நீர் இருக்க வேண்டும்?

அந்தக் காலத்தில் சுடச்சுட நீரை விடுவார்கள். குழந்தை அலறும். குளித்து முடிந்தவுடன் செக்கச்செவேலென்று ஆகிவிடும். அதுமட்டுமல்ல; சுத்தம் செய்கிறேன் என்று வாயில் ஒரு விரலை விட்டு (பாவம் குழந்தையின் வாய் இத்துனூண்டு இருக்கும். கட்டை கட்டையாய் இருக்கும் விரலை அதன் வாயில் விட்டு) நாக்கு வழிப்பார்கள். பால் சாப்பிட்ட தடம் சில குழந்தைகளுக்கு நாக்கில் இருக்கும். அதை அப்புறப்படுத்த இப்படிச் செய்கிறோம் என்பார்கள். இதனால் எல்லாம் அந்தத் தடம் போகாது. தானாகவே போய்விடும்.

காதுகளில் எல்லாம் குடைந்து குடைந்து உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். பல குழந்தைகள் குளியலறை பக்கம் எடுத்துக் கொண்டு போனாலே ஊரைக் கூட்டும்.தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தையால் ஒன்றும் செய்ய முடியாது என்று அதைக் கொடுமைப் படுத்தக்கூடாது.

கைபொறுக்கும் சூடு போதும்.

குழந்தைக்கு பவுடர் போடுவதைக் கூட நிறைய மருத்துவர்கள் வேண்டாம் என்கிறார்கள். குழந்தைக்கு மூச்சுத் திணறும் அளவிற்கு பவுடர் போடாதீர்கள். முக்கியமாக தலைக்கு பவுடர் போடவே போடாதீர்கள். நன்றாக தலையை துடைத்திருந்தாலும் கொஞ்சநஞ்சம் இருக்கும் ஈரத்தில் இந்தப் பவுடரும் சேர தலையில் சடை போடும்.

கழுத்து, கைக்கு கீழே, தொடை இடுக்குகளில் பவுடர் போடுவதால் இந்த இடங்கள் உலர்ந்து இருக்கும்.

மையிடுவது, பொட்டு வைப்பது எல்லாம் அவரவர் விருப்பம். மை, பொட்டு இவையெல்லாம் குழந்தையின் இளம் மேனியில் பாதிப்பை உண்டு பண்ணக் கூடும் என்று மருத்துவர்கள் இதெல்லாம் கூட வேண்டாம் என்கிறார்கள். குழந்தைக்கு மெலிசாக உடை போடுங்கள். செயற்கை இழைகளால் ஆன ஆடைகள், நிறைய ஃப்ரில் வைத்த, லைனிங் கொடுத்த உடைகள் வேண்டாம்.பாலூட்டித் தூங்கப் பண்ணுங்கள். குழந்தை நிம்மதியாகத் தூங்கட்டும்.