Home குழந்தை நலம் குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளும் விளையாட்டும்

13

குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான் செய்யும்.
குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு. 6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!
***
புன்சிரிப்புடன் கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள். விளையாட்டின் மூலம்தான் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து வரும் குழந்தையை பெற்றோர்கள் கைதட்டி `வா…வா…’ என்று உற்சாகமாக அழைப்பார்கள். சிரித்துக் கொண்டே வேகமாகத் தவழத்தொடங்கும் குழந்தை வெகுசீக்கிரமே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையிலும் இப்படித்தான் விளையாட்டு உங்கள் குழந்தையை வேகமாக உயரச் செய்யும்.
***
பிறந்த 3 மாதத்திலேயே குழந்தைகள் விளையாடத் தொடங்கிவிடும். 6 மாதம் வரை ஒலியெழுப்பும் பொம்மைகள், அசையும் பொருட்களே இவைகளின் விளையாட்டுத் தோழன். இந்த வயதுக்கு குழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை பற்றிப்பிடிக்க முயற்சி செய்யும். சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்க்கும். பொருட்களை பின்பக்கமாக வைத்துவிட்டால் உருண்டோ, திரும்பியோ பொருளை பார்க்கும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் சுற்றுச்சூழலை கவனிக்கத் தொடங்குகின்றன. மூளைவளர்ச்சி அதிகமாகும். ஒளிரும் செல்போன்கள் இந்தக்கால குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
***
6 முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள் புதிய புதிய பொம்மைகளைகளுடன் விளையாட பிரியப்படும். விசை கொடுப்பது, பட்டன் அழுத்துவதன் மூலம் இயங்கும் பொம்மைகளிடம் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாட விரும்பும். அவற்றை தானே இயக்கிவிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது தவழும் பருவம் என்பதால் இயங்கும் பொம்மைகளை பின்தொடர முயற்சிப்பார்கள்.
இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை முந்தைய நிலையைவிட வேகப்படுத்தும்.
***
ஒன்றேகால் வயது வரையுள்ள குழந்தைகள் நகரும் பொம்மைகளைப் பின்தொடர்ந்து செல்வார்கள். தள்ளுவண்டியின் மூலம் நடை பழகுவார்கள். மற்ற குழந்தைகளின் பின்னால் செல்லத் தொடங்குவார்கள். டப்பாக்களில் மணல் சேகரித்தல், சிதறிய பொருட் களை அடுக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வயதில்தான் கதைகேட்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்போது கதை சொல்லி வளர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வளருவார்கள். இது அறிவு, உடல்வளர்ச்சியின் முக்கியமான பருவம். இதற்கு விளையாட்டு மிக மிக அவசியம்.
***
2 வயது வரையுள்ள குழந்தைகள் அறிவுத்திறன் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும். பல நிறங்களை அடையாளம் காட்டும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களைக் கேட்டாலும் காட்டிவிடும். பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும். பந்து எறிவது, குழாயைத் திருப்புவது போன்ற சிறு பணி சார்ந்த விஷயங்களையும் செய்யும்.
ஓடி ஆடி விளையாடுவதால் கால்களும், உடலும் பலம் பெறும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார்கள்.
***
2-3 வயது குழந்தைகள் விளையாடச் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பந்தை உதைப்பார்கள், பிடிப்பார்கள். தடுமாறாமல் ஓடிவிளையாடுவார்கள். மணலில் வீடுகட்டி விளையாடுவது, டயரை உருட்டி விளையாடுதல், சுவர்கள், பெஞ்சுகளில் ஏறி விளையாடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டுகளால் உடல் பலம் பெறும். பல குழந்தைகளுடன் விளையாடுவதால் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். போட்டோவில் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.
***
குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம். அவர்களின் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்கிறார்கள். அறிவுத்திறன் வளர்கிறது. நண்பர்கள், பாசம், பிரிவு, வெற்றி, தோல்விகளை அறிந்து கொள்கிறார்கள். சமூகத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் சமூக அக்கறை வளர்கிறது.
அதிகம் அடாவடி செய்வதாக நினைத்து பெற்றோர் குழந்தைகளின் விளையாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது. அவர்களின் சிறுசிறு வெற்றிகளையும் ஊக்குவித்து பாராட்டினால் அவர்கள் வெற்றியாளர்களாக வளருவார்கள்.