Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு வாழ்வியலை சொல்லி தரும் தொலைக்காட்சி

குழந்தைகளுக்கு வாழ்வியலை சொல்லி தரும் தொலைக்காட்சி

18

captureதொலைக்காட்சியின் தாக்கம் இன்று அனைத்து தரப்பினர் மத்தியிலும் உள்ளது. அதிலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு மக்களின் பல்வேறு விதமான வாழ்வியலை சொல்லித்தரும் அம்சமாக மாறிவிட்டது. ஆனால் அந்த வாழ்வியல் என்பது அவர்கள் வாழும் சூழ்நிலையாக இல்லாமல் உலகம் சார்ந்ததாக இருக்கிறது.

அந்த அளவிற்கு குழந்தைகள் டி.வி.யோடு மிக அதிகமாக பேசுகிறார்கள், பார்க்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள். அந்த அளவிற்கு உலகில் செய்திகள் நிறைந்த தகவல்களை தருவதாக டி.வி.க்கள் உள்ளன. அதில் இருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமான தகவல்கள் மக்களுக்கு கிடைக்கின்றன. அதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களை மேம்படுத்திக்கொள்வது மட்டுமின்றி சமூக அவலங்கள், பெருமை மிக்க நிகழ்வுகள் உள்பட பல்வேறு விதமான தகவல்களை அறிந்து கொள்கிறார்கள்.

ஆனால் அந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகளே டி.வி.நிகழ்ச்சிகளில் மேலோங்கி வருகிறது. அதை பார்ப்பதன் மூலம் தங்களை சிறிதுநேரம் மகிழ்வித்துக் கொள்வதாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நாள்பட, நாள்பட அவர்கள் பொழுதுபோக்குகளில் மூழ்கி அறிவார்ந்த செய்திகளை புறக்கணிக்கும் நிலை உருவாகி வருகிறது.

எல்லா துயரங்களையும் பொழுதுபோக்கு நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பேசி முடித்துக் கொள்ளும் மனநிலை வளர்ந்து வருகிறது. எந்த பிரச்சினைகள் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட தவறும் போக்கும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. பொழுதுபோக்கு அம்சங்கள் வாழ்வில் தேவை தான். ஆனால் அதிலேயே மூழ்கி விடுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

சமூகத்தில் உண்மையான நிகழ்வுகளை ஒருவர் பார்ப்பதற்கும் தடையாக அமைந்துவிடும். அந்த வகையில் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும். அதற்கு முன் மாதிரியாக பெற்றோர் பார்க்கும் நிகழ்ச்சிகளும் அமைய வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து டி.வி.யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பது அவர்களின் கற்றலுக்கும், கண்ணுக்கும் கெடுதலாக அமையும். மேலும் டி.வி. பார்ப்பதற்கான நேரத்தை வரையறுக்க வேண்டும். சில குழந்தைகள் இரவு அதிக நேரம் கண்விழித்து டி.வி.பார்க்கின்றனர்.

அப்படி இருக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு காலையில் எழுந்திருக்க முடிவது இல்லை. மேலும் பள்ளியில் அமர்ந்து பாடத்தை கவனித்து படிக்க முடிவதும் இல்லை. இதனால் அவர்கள் பல்வேறு நிலைகளில் பின்தங்கி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

தொலைக்காட்சி மிகவும் சக்தி வாய்ந்த சாதனம் என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் நமக்கும், குழந்தைகளுக்கும் உகந்தது எது என்று பகுத்தறிந்து நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும். முடிந்த வரை குழந்தைகளோடு இருந்து நேரத்தை செலவிட வேண்டும். தொலைக்காட்சி போன்ற சாதனங்களை பார்த்து குழந்தைகள் புதிது புதிதாக கற்றுக்கொண்டு அதை கவனித்து குழந்தைகள் செய்வதில் உள்ள சரி, தவறுகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மென்மையாக அறிவுறுத்த வேண்டும்.