Home பெண்கள் உடல் கட்டுப்பாடு குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்

குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்

27

நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, பாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன்றவற்றினால் இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடலை குறைக்கிறேன் பேர்வழி என்று சந்தைகளில் கூவி கூவி விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி விழுங்குகின்றனர். இவ்வாறு உடல் மெலிவதற்காக உட்கொள்ளப்படுத் மாத்திரைகளினால் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்படும் என்று அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மார்வின் கொன்ஸ்டம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, யுஏஇ, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலோனோர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நீரிழிவு, இதயபாதிப்பு போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் உடல் மெலிவதற்காக மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

குண்டு உடலை இளைக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளால் இதயத்திற்கு ஆபத்தாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை விற்பனை செய்ய அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசியை கட்டுப்படுத்தும்

உடல் எடையைக் குறைக்கவும், உடல் மெலியவும் பயன்படுத்தும் மாத்திரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது sibutramine(சிபுட்ராமின்) என்ற வேதிப்பொருளாகும். இப்பொருள் இதய அதிர்ச்சிக்கு காரணமாக அமையும் என மருத்துவ உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மருந்துகளில் சில தேவையற்ற கலவைகள் உள்ளன. இவை பசியை இல்லாமலாக்கும். இதனால் சாப்பிடும் உணவின் அளவு குறையும். ஆனால், இவை கடுமையான உடல்நலனை சீர்கெடுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குவதாக புகார்கள் வெளியாகின.

இதயத்தை பாதிக்கும்

இதயத்துடிப்பை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்யும் sibutramine(சிபுட்ராமின்) இதய அதிர்ச்சிக்கும், முடக்குவாதத்திற்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து sibutramine(சிபுட்ராமின்) வேதிப்பொருள் அடங்கிய மருந்துகளை சந்தையிலிருந்து வாபஸ்பெற ஒரு சில நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.

மாத்திரைக்கு தடை

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் இம்மருந்துகள் இதயம் தொடர்பான நோய்களுக்கும், அதிக இரத்த அழுத்தத்திற்கும் காரணமாவதாக யு.ஏ.இ சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ப்ராக்டீஸ் அண்ட் லைசன்ஸ் பிரிவு சி.இ.ஒ டாக்டர்.அமீன் அல் அமீரி தெரிவித்துள்ளார். ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் உத்தரவின் படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த வேதிப்பொருள் அடங்கிய இதர சில மருந்துகள் ஏற்கனவே யு.ஏ.இயில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.இதயத்தின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும் என்பதால் உடல் மெலிய பயன்படுத்தப்படும் மாத்திரைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து உணவுகள்

நம் நாட்டில் பல தொலைக்காட்சிகளில் இன்றைக்கு உடலை இளைக்கச் செய்யும் மாத்திரைகளும், டெலிஷாப்பிங் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் உடல் எடையை குறைக்க முறையான உடற்பயிற்சியும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உட்கொண்டாலே போதும். கெட்ட கொழுப்புகள் அடங்கிய பீஸா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள். இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்காமல் செயற்கையாக உடல் எடையை குறைக்க நினைத்தால் தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் அவர்களின் எச்சரிக்கையாகும்.