Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள்

கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள்

18

பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது. இந்த கர்ப்பப்பையானது ஹார்மோன்களின் தூண்டுதலால் பருவமடையும் வயதிலிருந்து மெனோபோஸ் பருவம் வரைக்குமான காலப்பகுதியில் ஒழுங்கான மாதவிடாயை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இதே கர்ப்பப்பைதான் சிலவேளைகளில் பெண்களுக்கு வேதனைகளையும் சோதனைகளையும் கொடுக்கும் ஒரு அங்கமாகவும் காணப்படுகின்றது.

இதனால் சில சந்தர்ப்பங்களில் இந்தக் கர்ப்பப்பையை சிகிச்சை மூலம் அகற்றவேண்டி ஏற்படுகின்றது.

இந்த சிகிச்சையில் கர்ப்பப்பையும் அதன் வாய்ப்பகுதியான சேர்விக்ஸ் உம் (VAGINA) அகற்றப்படுகின்றன. ஆனால் யோனி வாசல் பகுதி (VAGINA) அகற்றப்படுவதில்லை. இதனால் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களில் மாதவிடாய் வருவதில்லை. ஆனால் தாம்பத்திய உறவில் தொடர்ந்து ஈடுபட முடியும். அத்துடன் கர்ப்பப்பை அகற்றப்படும் போது கட்டாயம் சூலகங்கள் அகற்றப்படவேண்டியதில்லை.

இது சூலகங்களில் காணப்படும் அசாதாரண தன்மைகளைப் பொறுத்து அவை கட்டாயம் அகற்றப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் சூலகங்கள் தான் பெண்ணில் பெண்மைக்குரிய தன்மைகளைப் பேணிப் பாதுகாக்கும் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. எனவே சூலகங்களை அகற்றும் போதுதான் ஒரு பெண் பலவீனமடைகின்றாள். ஆனால் கர்ப்பப்பையை அகற்றும் போதல்ல.

கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள் :

1. அதிகப்படியான மாதவிடாய்ப் போக்கு நீண்டகாலமாக இருக்கும்போது மருந்துகள் யாவும் பாவித்து அவற்றால் பலன் கிடைக்காவிட்டால் குழந்தைப் பாக்கிய தேவைகள் அனைத்தும் முடித்துக் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கர்ப்பப்பை அகற்றப்படும்.

2. கர்ப்பப்பையில் வளரும் தசைக் கட்டிகளான பைபுரோயிட் (Fibroids) மிகப்பெரிதாக இருக்கும் போதும், நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் போதும் குழந்தைப் பாக்கியத் தேவைகள் முடித்துக் கொண்ட பெண்ணில் கர்ப்பப்பை அகற்றப்படுகின்றது.

3. கர்ப்பப்பையின் உட்சுவர்பகுதி கர்ப்பப்பையின் வெளியே வளருகின்ற எண்டோ மெற்றியோசில் (Endometriosis) மற்றும் அடினோமயோசில் (Adenomyosis) நோய் உடையவர்களில் மருந்து மூலம் சிகிச்சை பலனளிக்காது போனால் குழந்தைப் பாக்கியத் தேவைகளை நிறைவு செய்த பெண்ணில் கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றப்படும்.

4. கர்ப்பப்பையில் அல்லது கர்ப்பப்பையின் வாசல்ப் பகுதியில் அல்லது சூலகங்களில் ஏற்படும் புற்று நோய்களுக்காக கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றப்படும்.

5. வயது கூடிய பெண்களில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம் (Prolapse) போன்ற சிகிச்சைகளுக்குத் தீர்வாகவும் கர்ப்பப்பை அகற்றப்படும்.

6. சிலவேளைகளில் சாதாரண பிரசவத்தின் போதோ, சிசேரியன் பிரசவத்தின் போதோ, கட்டுப்படுத்த முடியாதவாறு குருதிப்பெருக்கு ஏற்பட்டால் இறுதிச் சந்தர்ப்பத்தில் பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக திடீரென கர்ப்பப்பையை அகற்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.