Home ஆரோக்கியம் கண்களுக்கு ஒரு மருத்துவம்

கண்களுக்கு ஒரு மருத்துவம்

35

கோணலாக நின்று, கொஞ்சம் கோக்குமாக்காகப் புன்னகை புரிந்து, க்ளிக் செய்தால், செல்ஃபிக்களைக் குவிக்கும் 12 மெகாபிக்ஸல் செல்போன் கேமராவைவிட நம் கண்கள் அதிவிசாலமானது. ‘மனித கண்கள், 576 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை’ என்கிறது ஒரு கணக்கு. அதனால்தானோ என்னவோ மனதுக்குப் பிடித்தவரைக் கண்ணோடு கண்கொண்டு நோக்கும்போது, மனதுக்குள் வயலின் இசைப்பதும், ‘பத்தாப்பு ஃபெயில்’ பேர்வழிகூட எதுகை மோனையோடு கவிதை எழுதுவதும் நடக்கிறது. ‘கண்களால் அல்ல, மூளையால்தான் நாம் பார்க்கிறோம்’ என அறிவியல் சொன்னாலும், பார்த்த விழி பார்த்தவுடன் மூளை சிதறி, ‘குணா’ கமலாக உலாத்துவதற்குக் காரணம் கண்களின் விந்தைதான்!

சிக்கிமுக்கிக் கல் கையில் சிக்கும் வரை, மனிதன் சூரிய ஒளியில் மட்டுமே தன் வாழ்வைக் கட்டமைத்தான். கற்களின் உரசலில் உமிழ்ந்த வெளிச்சம், நாளடைவில் கார்பனும் பிற இழைகளும் உமிழும் வெளிச்சம் வரை வளர்ந்ததில், இரவு என்பது கடிகாரத்துக்கு மட்டும் என்றானது. அதுவும் சமீபத்திய விதவிதமான எல்.இ.டி வெளிச்சங்கள் ஒளிரும் துரித வாழ்வியலில், கண்கள் கணிசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. எல்.இ.டி ஸ்க்ரீன் உடைய செல்போன் ஆகட்டும், டேப்லெட் கணினிகள் ஆகட்டும் ஒரு பல்பை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருப்பது போன்றதுதான் என நம்மில் பலருக்குப் புரிவது இல்லை.

‘என் புள்ளை அவனே பாஸ்வேர்டு போட்டுக்குவான்’, ‘குட்டிப் பாப்பா எப்படித்தான் கரெக்டா கேம்ஸைத் தட்டித் தட்டி விளையாடுறான்னே தெரியலை?’ என, கனிந்த ‘ஆப்பிளை’ச் சுவைக்க வேண்டிய குழந்தைகள் ‘மினி கணினி’ ஆப்பிளில் விளையாடுவதை மெச்சும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கைஸ குழந்தையின் கார்னியாவையும் ரெட்டினாவையும் எல்.இ.டி திரை தொடர்ச்சியாக உமிழும் ஒளிக்கற்றை பாதிக்கலாம். குறிப்பாக, அதன் ஊதா நிறம் உண்டாக்கும் அபாயம் குறித்த சர்ச்சை விவாதங்கள் உலகெங்கும் வலுத்துவருகின்றன. மாட்ரிட் பல்கலைக்கழக ஆய்வு, ‘எல்.இ.டி ஸ்க்ரீன் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படைவது உறுதி’ எனக் கூச்சலிடஸ இன்னொரு பக்கம், ‘அதெல்லாம் சும்மாஸ எல்.இ.டி ரொம்பப் பாதுகாப்பானது’ என சமாளிப்பிகேஷன் தட்டுகிறார்கள், டேப்லெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கண் மருத்துவர்கள். அவர்கள் பொய் சொன்னால் சாமி கண்களைக் குத்துமா என சத்தியமாகத் தெரியாது. ஆனால், 400 நானோ மீட்டருக்குக் குறைவான பாண்ட் அலகுடன் உமிழப்படும் கதிர்களால் கண்களின் கார்னியாவும் ரெட்டினாவும் வெப்பமாகி கண்களைக் குத்தும் என்ற எச்சரிக்கை மட்டும் உண்மை!

‘ஆமாஸ இப்படி என்ன செஞ்சாலும் பாதிப்புனு பயமுறுத்திட்டே இருங்க. கம்ப்யூட்டர் முன்னாடிதானே எனக்கு வேலை. நான் வேற என்னதான் பண்றது?’ எனக் கேட்போருக்கு சில உபாயங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினித் திரையைவிட்டு பார்வையை விலக்கி தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள். கணினித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது, கண்கள் இமைக்க மறக்கிறது. ஆகவே, 30 நிமிட இடைவெளியில் திரையைவிட்டு பார்வையை விலக்கி இமைப் பட்டாம்பூச்சிகளை சிறகடிக்க வைப்பது நலம். ஏனெனில், கண்களின் விழிப்படலங்கள் எப்போதும் கொஞ்சம் ஈரமாக இருக்க வேண்டும். கணினி வேலை அந்த விழிப்படலங்களை உலர்த்திவிடும். அடிக்கடி கண் சிமிட்டல்களோடு வெதுவெதுப்பான ஈரத் துணிகொண்டு கண்களைத் துடைத்து, புருவங்களை மசாஜ் செய்யுங்கள்!

நாகரிகத் தொட்டில் ஆட்டலில் மூக்குத்தி, தொப்புளுக்குத் தாவியது. கையில் குத்திய பச்சை, பற்களில் பதிந்தது. மேட்சிங் பிளவுஸ் நாகரிகம் மேட்சிங் உதட்டுச் சாயம் தாண்டி இப்போது மேட்சிங் கான்டாக்ட் லென்ஸ் வரை வந்து நிற்கிறது. கண்களின் கார்னியாவுக்கு ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால்தான் உயிர் பிரிந்த பிறகும் கண்கள் மரிக்காமல், இன்னொருவருக்குப் பார்வை தருகின்றன. ஆனால், ஃபேஷன் என கலர் கலராக கான்டாக்ட் லென்ஸ் அணிவது, கார்னியாவின் செல்களைக் கொஞ்சம்

கொஞ்சமாகச் சிதைத்து, பார்வைத்திறனைப் பாதிக்கும். பார்வைக் குறைபாட்டுக்காக ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக கான்டாக்ட் லென்ஸ் அணிபவருக்கு கண் எரிச்சல், வெளிச்சத்தைப் பார்க்கும்போது ஏற்படும் கண் உறுத்தல் உண்டாவது இதனால்தான். ஆக, முடிந்தவரை கான்டாக்ட் லென்ஸ் தவிர்த்து அழகோடு அறிவாளி லுக்கும் தரும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்து பழகுங்கள்.

‘அம்மாஸ போர்டுல எழுதிப் போடுறது எனக்குச் சரியாவே தெரிய மாட்டேங்குதுஸ’ என உங்கள் பிள்ளை சொன்னால், அது கண் பிரச்னையா, கணக்குப் பிரச்னையா எனத் தெரிந்துகொள்வது மிக முக்கியம். ‘ஹாரிபாட்டர்’ படம் ஏகத்துக்கும் ஹிட்டானதில், இன்று சும்மாங்காட்டியும் முட்டைக் கண்ணாடி போட்டு முழிக்க பல குழந்தைகளுக்குக் கொள்ளை ஆசை. அப்படியான குழந்தைகளுக்கு சிறுவயது முதலே உணவில் சில சமாசாரங்களைச் சேர்த்து விழித்திறனை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும்.

‘போன கண்ணும் திரும்பி வருமாம் பொன்னாங்கண்ணி கீரையாலே’ என்றொரு சொலவடை உண்டு. அந்த அளவு சத்தான அந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட சங்கடப்படக் கூடாது. நிறமிச் சத்துள்ள சிவப்பு பொன்னாங்கண்ணியும் சிறப்பானதே. இந்தக் கீரையை நல்லெண்ணெயில் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து கண் பார்வையைச் சீராக்க தேவையான பித்தத்தைச் சீர் செய்யும் என்கிறது சித்த மருத்துவம். இதில் பக்கவிளைவாக முடி போஷாக்காக வளரும். நெல்லிக்காய் பொடியை நீரில் குழைத்து, தலையில் தேய்த்துக் குளிக்கும்போது, கண்கள் குளிரும்; பார்வை துலங்கும் என்பது பாரம்பர்யப் புரிதல்.

‘மெட்ராஸ் ஐ’ பாதித்தால், அலறித் தெறித்து ஓடாமல், கீழாநெல்லிக் கீரையை மோரில் அரைத்துச் சாப்பிடுவதும் கீழாநெல்லிக் கீரையை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி அதை தலைக்கு வைத்துக் குளிப்பதும், ‘மெட்ராஸ் ஐ’யால் வரும் கண் எரிச்சலைக் குறைக்கும். இதை ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்காதவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாம். கொத்துமல்லிக் கீரையை பச்சையாக சட்னியாக அரைத்துச் சாப்பிடுவது குழந்தைகளின் விழித்திறனை அதிகரிக்கும்.

கண்களுக்கு விட்டமின் ஏ-யின் பயனை, எல்.கே.ஜி முதலே ‘சி ஃபார் கேரட்’ என இங்கிலீஷ் துரைமார்களும் ஆசிரியர்களும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கேரட்டைவிட பல்லாயிரம் மடங்கு அதிக கரோட்டினாய்டுகள் நமது முருங்கைக் கீரையில் இருப்பதை, நம்ம ஊர் பாட்டனி வாத்தியர்கள்கூட மறந்துவிட்டார்கள். காதலிக்கு ஆசையாகக் கொடுக்கும் வடிவத்தில் இல்லாததாலும், புறவாசலில் விளைவதாலும் கொஞ்சம் மதிப்பு குறைச்சலாகப் பார்க்கப்படும் பப்பாளியும் கண்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். மிளகு போட்ட தினைப் பொங்கல், கேரட் தூவிய தினை ரவா கிச்சடி, முருங்கைக் கீரை குழம்பு போட்ட தினைச் சோறுஸ ஆகியவை அத்தனை கண்ணாளருக்குமான சிறப்பு உணவுகள்.

புலால் உணவில், மீன்கள் கண்களின் நண்பர்கள். வெள்ளாட்டு மண்ணீரல், கண் நோய் பலவற்றுக்கான மிகச் சிறந்த மருந்து. கண்களின் இமைகளில் அடிக்கடி வரும் கண்கட்டிக்கு நாமக்கட்டி போடுவது, கிருமி நாசினியாக இருந்து கட்டிகளை உடைத்து சீழ் வெளியேற்ற உதவும் நெடுங்கால மருந்து.

காதலையும் கோபத்தையும் மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் ஒரு கருவி கண்கள். அன்றைய தமிழ் மருத்துவர்கள், எண்வகைத் தேர்வுகளான நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் எனும் சோதனைகளில் விழிவழி நோய் அறிதலான கண்களைப் பார்த்து நோயைக் கணித்த வித்தை பிற உலகம் அதிகம் அறியாதது. தூங்கி எழுந்ததும் கண்கள் சிவந்திருப்பது உடலின் அதிசூடு, பித்த உயர்வு ஆகியவற்றின் அடையாளம். இவர்கள் ‘ரத்த அழுத்தம் சீராக உள்ளதா?’ என சோதிப்பது அவசியம். இப்படிச் சிவந்த, சற்று மஞ்சளான கண்கள் உள்ளோருக்கு அஜீரணம், வயிற்றுப்புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கண்களின் மருத்துவ விஷயங்கள் தாண்டி கண்கள் இல்லாத உலகம் பற்றி கண்டிப்பாக நாம் படித்து அறியவேண்டிய இலக்கியம் இரண்டினைப் பற்றி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் சமீபத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. வெளிச்சத்தில் பார்த்ததை இருட்டில் வரையும் மாபெரும் தமிழ் ஓவியன் மனோகர் தேவதாஸ், இருட்டில் செலவழித்த 20 ஆண்டுகளை வெளிச்சத்தில் சிலாகித்து எழுதும் தேனி சீருடையான் ஆகியோர் பற்றியே அவர் குறிப்பிட்டார். Retinitis Pigmentosa எனும் படிப்படியாகப் பார்வை இழப்பைத் தரும் கொடிய நோயில் பார்வையை இழந்துவரும் மனோகர் தேவதாஸ், தன் இளமைக்காலத்தில் வெளிச்சத்தில் பார்த்த வண்ணங்களால் சிலாகித்தவற்றை, இன்று இருட்டில் தன் தூரிகையில் வரைகிறார். அத்தனையும் பிரமிக்கவைக்கும் சித்திரங்கள். பிறப்பு முதலே பார்வையற்றவராக வறுமைச் சூழலில் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்த தேனி சீருடையான், அறுவைசிகிச்சை மூலம் அதிர்ஷ்டவசமாக மீண்டும் பார்வைபெற்றார். தான் இருட்டில் வாழ்ந்த நாட்களை ‘நிறங்களில் உலகத்தில்’ எனும் புத்தகத்தில் மிக அற்புதமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர்கள் இருவரின் கண்களும், முகத்தில் இல்லை; அகத்தில் இருக்கின்றன. மிக அழகாக, அமைதியாக, ஆழமாக..!

நாம் மரிக்கும்போது நம்மோடு மண்ணில் புதைய வேண்டியது இல்லை நம் கண்கள். நமக்குப் பின்னும் இருட்டில் இருக்கும் இன்னொருவருக்கு, உலகத்தை உற்றுப்பார்க்க வாய்ப்பு அளிப்பவை. ஆகவே, அவற்றைக் கூடுதல் அக்கறையோடு பராமரிப்போம்!
கண்களைக் காக்கும் நலப் பழக்கங்கள்!

அடிக்கடி தலைக்குக் குளிப்பது கண்களுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். அதிலும் எண்ணெய்க் குளியல் மிக அவசியம். நம் தாத்தா பாட்டிகளின் கண்ணாடியற்ற கழுகுப் பார்வைக்கு அதுதான் காரணம். குளித்து முடித்ததும், குறைந்தது 2-3 மணி நேரம் வரை தலையில் இருக்கும்படி எண்ணெய் வைப்பது முடியை மட்டும் அல்ல, கண்களையும் பாதுகாக்கும்.

இரவு நெடுநேரம் விழித்திருப்பது, பின்னிரவிலும் போர்வைக்குள் ‘வாட்ஸ்அப்’பில் கடலை வறுப்பது கண்களைக் கெடுக்கும் உத்திரவாதமான விஷயங்கள்.

அதிக பித்தம் உண்டாக்கும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், நந்தியாவட்டம், தாமரை இதழ்களால் கண்களை மூடிக் கொள்வது இதம் அளிக்கும். இளநீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதும் கண் எரிச்சல் போக்கும். சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும் ‘இளநீர்க் குழம்பு’ எனும் கண்சொட்டு மருந்து கண் அயர்வுக்கும், ஒவ்வாமையால் வரும் கண் உறுத்தலுக்கும் நல்ல மருந்து.

காலை – மாலை இரு நேரங்களிலும் உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து உராய்வில் உருவாகும் வெம்மையை கண்களில் அழுத்திக் கொடுக்கலாம்.

இமைகளை மூடித் திறந்து, கண்களை மேலும் கீழும், பக்கவாட்டில் என உருட்டிச் செய்யும் பயிற்சியை தினமும் காலை, மாலை எனச் செய்ய வேண்டும்.

நோய்கள் ஜாக்கிரதை

நம்மில் பலர், சந்தேகத்தின் பேரில் செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். இது எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்! கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ணத் துாண்டுதலின் பேரில் ஒரு செயலை மறுபடி மறுபடி செய்வதே இந்நோயின் அறிகுறி. இதனை ஆங்கிலத்தில் OBBSESSIVE COMPULSIVE DISORDER என்கின்றனர்.
ஏழு வயது குழந்தைக்கும், எழுபது வயதுக்காரருக்கும் கூட இந்நோய் வரலாம்.

ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கியவர்கள் சில விசித்திரமான செயல்களைச் செய்வர். உதாரணத்திற்கு, கை கழுவுவது! இவர்கள், ஒரு முறை கை கழுவியவுடன் நிறுத்த மாட்டார்கள்; தொடர்ந்து ஐந்தாறு முறை கழுவுவார்கள்! தங்களின் கைகளில் இருக்கும் கிருமி போகவில்லை என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணம், அவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கும். அந்த சிந்தனையில் இருந்து வெளியேற முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
நோயின் வீரியம் அதிகமாக, அதிகமாக குளியல் சோப்பில் கை கழுவியவர்கள், துணி துவைக்கும் டிடர்ஜெண்டுகளில் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். அப்போதும், கைகளில் உள்ள அழுக்கு போகவில்லை என்ற எண்ணத்தில், துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளால் கைகழுவுவார்கள். இப்படி, நாள் முழுவதும் கைகளை கழுவிக்கொண்டே இருப்பார்கள்.
நம்மில் பலர் வெளியில் கிளம்பிப் போகும்போது, வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை இழுத்து சரிபார்ப்போம். அப்போதும்கூட, சந்தேகம் தீராமல், பூட்டில் தொங்குவதும் உண்டு. ஒருவகையில், இதுவும் இந்நோயின் அறிகுறிதான்!
இதற்கெல்லாம் சிகிச்சை முறைகள் உள்ளன என்றாலும், இவையெல்லாம் நோயின் தீவிரத்தை பொறுத்துதான்.