Home உறவு-காதல் ‘கணவர் என் மீது அன்பாக இல்லை’: மனைவி இப்படி சொல்ல என்ன காரணம்?

‘கணவர் என் மீது அன்பாக இல்லை’: மனைவி இப்படி சொல்ல என்ன காரணம்?

45

‘கணவர் என் மீது அன்பாக இல்லை’ என்று ஏங்கும் பெண்கள் ஏராளம். மனைவி மீது வெறுப்பு வர கணவன்மார்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். நீங்களும், கணவர் வெறுப்பும், சலிப்புமாக விலகிப் போவதுபோல உணர்ந்தால் கீழ்க்காணும் விஷயங்களை ஒரு முறை பரிசீலித்துப் பாருங்கள்!

1. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்காது. ஆண்களைப் பொறுத்த வரையில் மனோரீதியாகவே அவர்கள் எதையும் தாங்கி எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். எளிதில் அழும் ஆண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் காலம் காலமாக ஊட்டப்பட்டு வந்திருக்கிறது. எனவே அவர்கள் பெண்கள் எதையும் துணிவுடன் அணுகுவதையே விரும்புவார்கள்.

2. ஆனால் பெண்கள் வளரும் சூழல் வேறு. பெண்கள் வீட்டின் செல்லப் பிள்ளைகளாக வளர்வதுண்டு. கோரிக்கைகளின் வழியாகவும், செல்லக் கோபத்துடனும் தங்கள் பெற்றோரிடம் முறையிட்டு ஆசைகளை நிறைவேற்றி வந்திருப்பார்கள். கணவரிடமும் அதே பாணியில் நடந்துகொள்வது எல்லா நேரத்திலும் பயன்தராது. அழுகை பலவீனத்தின் அடையாளம் என்று ஆணின் மனதில் பதிந்திருப்பதால், எதற்கெடுத்தாலும் அழும் பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபமே கொப்பளிக்கும். அனுதாபம் இரண்டாம் பட்சமாகத்தான் வரும். எனவே கணவரிடம் அழுது முறையிடாமல், மீண்டும் மீண்டும் தேவையை நினைவூட்டலாம். சரியான சந்தர்ப்பத்தில், போதிய பொருளாதார சூழலில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

3. தன்னம்பிக்கை இல்லாத பெண்களையும் ஆண்களுக்குப் பிடிக் காது. எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசிக் கொண்டு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடும் பெண்களை அவர்கள் விரும்புவதில்லை. ‘கஷ்டம் தீர வழி என்ன?’ என்று யோசிக்கும் சூழல் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படும். அந்த வேளையில் தம்பதியர் இணைந்து துன்பத்தில், பொருளாதார சிக்கலில் இருந்து மீள வேண்டும். ‘அது சரிப்படாது, இது வேண்டாம்’, ‘அப்படிச் செய்தால் மாட்டிக் கொள்வோம்’ என்று எல்லாப் பக்கமும் தடை போடும் தன்னம்பிக்கையற்ற பெண்களை கணவருக்குப் பிடிக்காது.

4. கணவரின் யோசனைக்கு மனைவி நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். அந்த முயற்சி கைகூடவில்லையென்றால் மாற்று வழியில் பிரச்சினை தீர முயற்சிக்கலாம். வாழ்க்கையை முற்றிலும் மாற்ற வேண்டும், மற்றவர் போற்றும்படி மாற வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடம் இருப்பது உண்டு. உடை, நடை, பாவனையிலும் முற்றிலும் மாறி தன்னை மற்றவர்போல மெருகேற்றிக் கொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள். இப்படி மற்றவர்போல மாற விரும்பும் பெண்ணை கணவர் விரும்புவதில்லை. இருக்கும் சூழலை புரியாமல் முற்றிலும் புதிதாய் மாறத் துடிப்பது பொருந்தா சிந்தனையாகும். தேவையற்ற வகையில் ஆடம்பரமும், பகட்டும் காட்டும் இந்த சிந்தனையில் இருந்து பெண்கள் மாறிக்கொள்ளவேண்டும்.

5. அதிக உரிமை மற்றவர்களுக்கு அளித்தாலும் கணவன்மார்களுக்குப் பிடிக்காது. அது உங்கள் அம்மா, அப்பா அல்லது சகோதரர், தோழி என யாராக இருந்தாலும் தன்னைவிட அதிக முன்னுரிமை பிறருக்கு அளித்தால் அதை கணவரின் மனது ஏற்றுக் கொள்ளாது. அதே போல மனைவி மற்ற ஆண் நண்பர்களுக்கு அளிக்கும் முன்னுரிமையும் கணவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்றாலும், அவர்களுக்கான முன்னுரிமை பற்றி கணவரிடம் வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

இதயத்தை சுக்குநூறாக்கும் வார்த்தைகளை உதிர்க்கும் மனைவியை கணவன்மார்கள் வெறுக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்வதும், குத்திக் காட்டிப் பேசுவதும், குடும்பத்தை குறைகூறி பேசுவதையும் அவர்கள் விரும்புவதில்லை. பொருளாதார சூழல் மற்றும் பிற காரணங்களால் வாக்குவாதம் ஏற்படும்போது ஏட்டிக்குப் போட்டியாக பேசும் பெண்களை ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. வார்த்தைகளை கவனமாக கையாள்வது ஒரு கலை. அது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். பிரச்சினைகள் பெரிதாகும்போது, யாராவது ஒருவர், சில நிமிடங்கள் மவுனம் காத்தால் அமைதி ஏற்பட்டுவிடும். சுடும் வார்த்தைகளைப் பேசி வாழ்வை சுமையாக்கிக் கொள்ளக்கூடாது.

6. வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கும் பெண்களையும் கணவருக்குப் பிடிக்காது. நீங்கள் ஏகப்பட்ட கனவுகளை கொண்டிருக்கலாம். அந்த ஆசைகளெல்லாம் ஈடேறாமல் ஏக்கங்களாகவே போய்விடுமோ என்ற அச்சம் உங்களை புலம்ப வைக்கலாம். உறவு ரீதியாகவும் திருப்தியில்லாத சூழல் ஏற்படலாம். இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியில்லை என்று புலம்புவதும், மற்றவர்களிடம் முறையிடுவதையும் கணவர்கள் விரும்புவதில்லை. சூழலை புரிந்து கொள்ளாமல், குறைகளை மற்றவரிடம் முறையிடுகிறாளே? என்ற ஆதங்கமே ஆண்களை கோபமுறச் செய்யும். எனவே ஆசைகளை நிறைவேற்ற தக்க தருணங்களை எதிர்பார்த்து காத்திருப்பதே நல்லது.

7. மேக்கப் பிரியையாக இருக்கும் மனைவியை கணவர் விரும்புவதில்லை. ஆனால் ஆரோக்கியம் பேணும் பெண்களை அவர்கள் விரும்பவே செய்கிறார்கள். உடல் நலம் பேணாத பெண்களிடம் கணவன்மார்கள் எளிதில் நெருக்கம் காட்டுவதில்லை. அலங்காரம் செய்து அழகுச் சிலையாக காட்டுவதைவிட, ஆரோக்கியம் பேணி கட்டுக்கோப்பான உடல்வாகுடன் இருப்பது தம்பதியிடையே நெருக்கத்தை அதிகமாக்கும். குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள், வயதாகிவிட்டது, உடல் பெருத்துவிட்டது என்று பெண்கள் உடல் நலனில் அக்கறையில்லாமல் இருக்கக்கூடாது.

8. ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெண்களையும் கணவர்கள் வெறுக்கிறார்கள். குடும்ப சூழல், எதிர்கால தேவை எதையும் யோசிக்காமல் அழகிற்கும், அலங்காரத்திற்கும், பகட்டிற்காகவும் கூடுதலாக செலவு செய்வது சிக்கலை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கணவர் ரொம்பவே சிரமப்பட வேண்டியதிருக்கும்.

9. தன்னை மதிக்காமல் நடந்து கொள்ளும் மனைவியை அறவே ஆண்களுக்குப் பிடிக்காது. நானும் வேலைக்குப் போகிறேன், சம்பாதிக்கிறேன், உங்களைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறேன் என்ற ரீதியில் நடந்து கொள்ளும் பெண்களை ஆண்கள் ரொம்பவே வெறுக்கிறார்கள். கணவரின் திறமையை, பண்புகளை, ஊதியத்தை மட்டமாக பேசுவதும், மதிப்பு கொடுக்காமல் கர்வத்துடன் நடந்து கொள்வதும் மோதலையே உருவாக்கி, பிரிவினையைத் தூண்டும்.

இருவரும் இணைந்து, குழந்தைகளும் சேர்ந்து உருவானதுதான் இல்லறம். இதில் நீயா- நானா? போட்டி என்றுமே சரியாகாது. உங்கள் திறமையும், அறிவும், ஆற்றலும் உங்களுக்குள் போட்டியை உருவாக்கக்கூடாது. சமுதாயத்தில் போட்டிப் போடலாம். வீட்டுக்குள் போட்டி போடக்கூடாது. அதுவே நல்லறம் நிறைந்த இல்லறம்!