Home உறவு-காதல் கணவன் – மனைவி சண்டையை தீர்க்க உதவும் எளிய வழிகள்!!!!

கணவன் – மனைவி சண்டையை தீர்க்க உதவும் எளிய வழிகள்!!!!

24

கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்சனை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையைத் தவிர்ப்பதற்கான மேஜிக் வழிமுறைகளை பார்க்கலாம்.

* கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பு வெறுப்பு, பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். `நிறை குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம்’ என்ற மனநிலைக்கு வரவேண்டும்.

* கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது… கணவன் – மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும்.

* கணவன் – மனைவி சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைந்தால் பிரச்சனை வேறு வடிவம் எடுத்து பெரிதாகும். அந்த மூன்றாவது நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயல வேண்டும்.

* ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்சனை குறைந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது.

* ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்போதுதான் அது பல்கிப் பெருகும். அது சிறு சீண்டல்களாகவோ, பாராட்டாகவோ இருக்கலாம். `இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு’, `இப்ப கொடுத்த காபி சூப்பர்!’ என பாசிட்டிவ் கமென்ட் பகிர்ந்துகொள்வது நல்லது.

* தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும்.

* பணம் சம்பந்தமான விஷயங்களில் இருவரும் பேசிவைத்துக்கொண்டு வரவு – செலவை பராமரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.

* தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது. விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே சமமாக இருக்க வேண்டும்.