Home பெண்கள் தாய்மை நலம் உடலில் பொருத்தப்படும் கருத்தடை சாதனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

உடலில் பொருத்தப்படும் கருத்தடை சாதனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

57

கருத்தடை சாதனம் என்பது, உடலுக்குள் பொருத்தப்படுகின்ற, தீக்குச்சி அளவில் இருக்கின்ற ஒரு வளையும் தன்மை கொண்ட குழாயாகும். அதில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இருக்கும்.இதை மருத்துவர் பெண்ணின், கையின் மேல்பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்துவார், இது புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனை குறைவான, ஒரே அளவில் தோர்ந்து மூன்று ஆண்டுகள் வரை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும்.

இது எப்படி செயல்படுகிறது? (How does the contraceptive implant act?)
இந்தச் சாதனம் வெளிவிடும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன் பின்வரும் செயல்களைச் செய்கிறது:

கருமுட்டை வெளியிடப்படுவதைத் தடுக்கிறது
கருப்பை வாய்ப்பகுதித் தசைகளைத் தடித்ததாக்குகிறது (இதனால் விந்தணுக்கள் நுழைவது கடினமாகும்)
கருப்பையின் உட்புறச் சுவரின் (என்டோமெட்ரியம்) தடிமனைக் குறைக்கும், இதனால் கரு கருப்பையில் பதிந்து வளர முடியாமல் போகும்.

இது எப்படிப் பொருத்தப்படுகிறது? (How are contraceptive implants placed?)
அதிகம் பயன்படுத்தாத கையின் மேல்பகுதியில், தோலுக்கு அடியில் மருத்துவர் இந்த சாதனத்தைப் பொருத்துவார் (இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையில் பொருத்தப்படும்).
அந்தப் பகுதியில் மயக்க மருந்து கொடுத்து, தோல் உணர்ச்சியற்றுப்போகச் செய்யப்படுகிறது.கையின் மேல்பகுதியில் சிறு காயம் ஏற்படுத்தப்பட்டு, தீக்குச்சி அளவிலான இந்த சாதனம் வைக்கப்பட்டு, பிறகு தோல் மூடப்பட்டு கட்டு போடப்படுகிறது.
இதைச் செய்ய ஒரு நிமிடமே ஆகும், மற்ற முறைகளை விட இது வலி குறைந்ததும் கூட.
வைத்த பிறகு, அது பார்ப்பதற்குத் தெரியாது, ஆனால் தோலுக்கடியில் அது இருப்பதை உணர முடியும்.
இந்த சாதனத்தை மூன்று ஆண்டுகளுக்குள் அகற்றிவிட வேண்டும், இதை அகற்றுவதும் எளிது, மூன்று நிமிடங்களில் அகற்றிவிடலாம்.
பழைய சாதனம் இருந்த இடத்தில், காயம்பட்ட அதே இடத்தைத் திறந்து புதிய சாதனத்தைப் பொருத்தலாம்.
எப்போது இந்த சாதனம் பொருத்தப்படும்? (When can an implant be inserted?)
நீங்கள் கர்ப்பமாக இல்லை என்பதை மருத்துவர் உறுதிப்படுத்திய பிறகு, மாதவிடாய் சுழற்சியின் எந்த நாளிலும் சாதனத்தைப் பொருத்திக்கொள்ளலாம்.
மாதவிடாய் சுழற்சியின் முதல் ஐந்து நாட்களுக்குள் சாதனம் உள்ளே பொருத்தப்பட்டால், அது உடனடியாக கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பை அளிக்கத் தொடங்கும்.
மாதவிடாய் சுழற்சியின் வேறு நாளில் சாதனம் பொருத்தப்பட்டால், அடுத்த 7 நாட்கள் வரை நீங்கள் கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியாது. ஆகவே, அதுவரை ஆணுறை போன்ற பிற கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
பிரசவத்திற்குப் பிறகு

வழக்கமாக, பிரசவத்திற்குப் பிறகு இதனை மூன்று வாரங்கள் கழித்துப் பொருத்தலாம்.

குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் தாய்க்கு சாதனம் பொருத்தப்பட்டால், சாதனம் உடனடியாகப் பலன் கொடுக்கத் தொடங்கும்.
21 நாட்களுக்குப் பிறகு பொருத்தப்பட்டால், அடுத்த 7 நாட்களுக்குப் பிறகே அது பலன் கொடுக்கத் தொடங்கும். அது வரை, ஆணுறை போன்ற பிற கருத்தடை முறைகள் தேவைப்படலாம்.
தாய்ப்பாலூட்டும்போதும் இந்த சாதனத்தைப் பொருத்துவது பாதுகாப்பானதே.

கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்குப் பிறகு

கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு நடந்த பிறகு, உடனடியாக சாதனத்தைப் பொருத்தலாம். அது உடனடியாகப் பலன் கொடுக்கத் தொடங்கும்.

கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவுக்கு 5 நாட்களுக்குப் பிறகு சாதனம் பொருத்தப்பட்டால், அடுத்த 7 நாட்கள் வரை நீங்கள் கூடுதல் கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இவை எந்த அளவுக்குப் பலனளிக்கக்கூடியவை? (How effective are contraceptive implants?)
இவை மிகுந்த பலனளிப்பவை, இவற்றின் தோல்வி வீதம் மிகக் குறைவு (0.05 சதவீதம் மட்டுமே).அதாவது, சாதனம் பொருத்தப்படும் 1000 பெண்களில் ஒருவர் மட்டுமே கர்ப்பமடைய வாய்ப்புள்ளது, அதுவும் குறைவு.

இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதில் உள்ள பக்கவிளைவுகள் என்னென்ன? (What are the side effects and risks associated with contraceptive implant use?)
சீரற்ற இரத்தப்போக்கு: மாதவிடாயில் அடிக்கடி இரத்தப்போக்கு இல்லாமல் போவது (33.6%), இரத்தப்போக்கு இல்லாமல் போவது (22.2%), நீண்ட கால இரத்தப்போக்கு (17.7%) அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்படுவது (6.7%)
எடை கூடுதல் (2.3%)
திடீர் மனநிலை மாற்றங்கள்
தலைவலி (1.6%)
முகப்பரு (1.3%)
மன இறுக்கம் (1.0%)
கருத்தடை சாதனம் பொருத்துவதன் நன்மைகள் (What are the advantages of contraceptive implants?)
நீண்ட காலத்திற்கு, அதாவது மூன்று ஆண்டுகளுக்கு கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
அதிக செயல்திறன் கொண்டது.
பாலியல் உறவில் குறுக்கிடாது.
தினமும் மறக்காமல் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை போன்ற, ஈஸ்ட்ரோஜென் மாத்திரைகள் ஒத்துவராத பெண்களுக்கு இம்முறை சிறந்த தெரிவாக உள்ளது
பொருத்திய பிறகு மனம் மாறினால், மீண்டும் கர்ப்பமடையும்படி மாறுவதும் எளிது. சாதனத்தை அகற்றிவிட்டால் பெரும்பாலான பெண்கள் (94%) அடுத்த மூன்று மாதங்களில் கர்ப்பமடைய முடியும்.
பொருத்துவதற்கு குறைவான நேரமே ஆகும்: இந்த சாதனத்தைப் பொறுத்த ஒரு நிமிடம் கூட ஆகாது, அகற்றுவதற்கு சுமார் 3 நிமிடமே ஆகும்.
பிரசவத்திற்குப் பிறகும் தாய்ப்பாலூட்டும்போதும் கூட பயன்படுத்தலாம்.
சாதனத்தை அகற்றிய உடனே, கர்ப்பமடையத் தயாராகிவிடுவீர்கள்.
அதிக இரத்தப்போக்கு ஏற்படுவது குறையும், மாதவிடாய் நாட்களில் வலி ஏற்படுவது குறையும், கீழ் இடுப்புப்பகுதி அழற்சி மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
இதைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் (What are the disadvantages of contraceptive implants?)
பொருத்துவதற்கும் அகற்றுவதற்கும் மருத்துவர் தேவை
பொருத்திய முதல் 7 நாட்கள் வரை, வேறொரு கருத்தடை முறையைப் பயன்படுத்த வேண்டும்.
மாதவிடாய் இரத்தப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும், மாதவிடாய் சீரின்றிப் போகலாம்.
பால்வினை நோய்களில் இருந்து பாதுகாப்பை அளிப்பதில்லை.
இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் (Can anyone use contraceptive implants?)
பெரும்பாலான பெண்கள் இந்த சாதனங்களைப் பொருத்திக்கொள்ளலாம். இந்த சாதனத்தைப் பொருத்திக்கொள்ள நீங்கள் தகுதியானவரா என உங்கள் மருத்துவர் முடிவு செய்வார். பின்வருபவை போன்ற சூழ்நிலைகளில், மருத்துவர் இந்த ஹார்மோன்களை உங்களுக்கு வழங்கமாட்டார்:

நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால்
அடுத்த ஆண்டு நீங்கள் கர்ப்பமடைய திட்டமிட்டிருந்தால்
உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால்
மாதவிடாய் நாட்களுக்கு இடையே அல்லது உடலுறவுக்குப் பிறகு காரணமின்றி பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டால்
மார்பகப் புற்றுநோய் இருந்தால் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்திருந்தால்
இரத்தக் குழாய்களில் இரத்தக்கட்டு இருந்தால் (திராம்போசிஸ்)
இதய நோய், பக்கவாதம் அல்லது பிற தமனி நோய்கள் இருந்தால்
பிற சிக்கல்களுடன் நீரிழிவுநோய் இருந்தால்
சிரோசிஸ் அல்லது கல்லீரல் கட்டிகள் போன்ற கல்லீரல் நோய்கள் இருந்தால்
ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் இருந்தால்
ஒற்றைத் தலைவலி இருந்தால்
சிஸ்டமிக் லுப்பஸ் எரித்தெமேட்டோசஸ் பிரச்சனை இருந்தால்