Home ஆரோக்கியம் உடம்பெல்லாம் வலித்து லேசான தலைவலி நிலைமை அப்படியா?

உடம்பெல்லாம் வலித்து லேசான தலைவலி நிலைமை அப்படியா?

37

கொஞ்சம் வாய் கசந்து, உடம்பெல்லாம் வலித்து, லேசான தலைவலியுடன், சோர்வைத் தரும் அந்தக்கால காய்ச்சல், ஒருவகையில் சுகமானதும்கூட. பாயில் படுத்துக்கொண்டே பூண்டுபோட்ட அரிசிக் கஞ்சியை கறிவேப்பிலைத் துவையல் தொட்டு சாப்பிட்டுவிட்டு, அக்கா, அத்தைகளுடன் தாயக்கட்டை உருட்டி விளையாடிய அந்தக் காய்ச்சல் நாட்கள் கலவரப்படுத்தியது இல்லை. கஞ்சியைக் கடைசி சொட்டு வரை குடித்தவுடன் சுக்கு, மிளகு, மல்லி, கருப்பட்டி போட்டு காய்ச்சிய கஷாயத்தை அம்மா நீட்டுவார். ‘வாய்ல இருந்து டம்ளரை எடுக்காம சாப்பிடணும்ஸ சொல்லிட்டேன்!’ என்ற அதட்டலில் அன்பும் அக்கறையும் பல சிட்டிகை தூக்கலாக இருக்கும். கூடவே, பக்கத்து வீட்டு மாமா தோட்டத்தில் அறுத்து எடுத்து வந்த நொச்சித்தழையை, கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கச் சொல்வார் அப்பா. எல்லாம் முடிந்து, பாயில் படுக்கும்போது அம்மா நெற்றியில் சுக்குப் பற்று போடுவார். அது காய்ந்து, லேசாக நெற்றி எரிய ஆரம்பிக்கையில் தலைவலி காணாமல்போய், சுக நித்திரை நம்மைத் தழுவும். இரவில் வியர்த்துவிட்டால், காய்ச்சலும் காணாமல்போகும். மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்காமல், ரொட்டி, பிரெட் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் புறப்படுவோம். ‘ச்சேஸ இந்தக் காய்ச்சல் இன்னொரு நாள் இருந்திருக்கக் கூடாதாஸ’ என்ற ஏக்கத்தை உண்டாக்கும் அந்த நாள் காய்ச்சல்! ஆனால், இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது?

‘என்னது காய்ச்சலா? உஷாரா இருங்கஸ எல்லா பக்கமும் ‘டெங்கு’வாம், ‘சிக்குன்குனியா’வாம்ஸ ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். அதிலும் காய்ச்சல் வந்த மூன்றாவது நாள் ஜுரம் குறையாமல் குழந்தை அனத்தத் தொடங்கினால், ‘எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்திருங்க’ என மருத்துவர் நீட்டும் பட்டியலில், டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா என வகைதொகையான பரிந்துரைகள். அந்த டெஸ்ட்களை சில/பல ஆயிரங்களைக் கொடுத்து எடுப்போம். அந்த முடிவுகளை கூகுளாண்டவர் உதவியுடன் நாம் அர்த்தப்பெயர்த்திப் பார்த்து, ‘அடஸ ஒண்ணும் இல்லை’ என கெத்தாக மருத்துவரிடம் சென்றால், ‘இது கிளினிக்கல் மலேரியா. ரிசல்ட்டில் வராது. சிக்குன்குனியா பாசிட்டிவ் இல்லை; ஆனா, சிக்குன்குனியா மாதிரி காய்ச்சல். இதில் நெகட்டிவாக இருந்தாலும் டெங்குவாக இருக்கலாம். அதனால் காய்ச்சல் இருக்குஸ ஆனா, இல்லை!’ என மருத்துவர் புரியாமல் பேச, போன காய்ச்சல் மறுபடி அடிக்க ஆரம்பிக்கும்; குளிரும் மயக்கமும் வரும். ‘எதுக்கும் அட்மிட் பண்ணிடுங்களேன்ஸ ப்ளட் பிளேட்லெட்ஸ் வேற குறையும்போல தெரியுது. எதுக்கு ரிஸ்க்?’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பதற்றம் கவ்விக்கொள்ளும்.

காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. உடல் வெள்ளையணுக்களைக்கொண்டு, கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் மின்சாரம் தடைபடுவது, தண்ணீர் தட்டுப்பாடு, மருத்துவமனை வசதி குறைவுகள் இருப்பதுபோல உடலிலும் வெள்ளையணு – கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல் – மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை உண்டாக்கும்.

அப்படி இப்போது தமிழகத்தை அடிக்கடி ஆட்டிப்படைக்கும் காய்ச்சல், டெங்கு. கிட்டத்தட்ட உலகின் பாதி மக்கள்தொகை டெங்கு வரும் வாய்ப்பில் இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 2006-12 வரை இந்தியாவில் நடந்த டெங்கு தாக்கம், நம் அரசு சொல்வதைக் காட்டிலும் ஏறத்தாழ 300 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு முடிவுகள். Aedes aegypti எனும் கொசுவின் மூலம் பரவும் டெங்கு, வைரஸ் காய்ச்சலில் ஒரு வகை. மடமடவென ரத்தத் தட்டுக்களைக் குறைத்து 102 டிகிரிக்கு மேலாக காய்ச்சல், தலைவலி, தசைமூட்டு வலி, தோலில் சிவப்புத் திட்டுக்கள்ஸ போன்றவற்றை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். இயற்கை சேமிக்கும் நீர்நிலைகளால் இந்தக் கொசுப் பெருக்கம் உண்டாகாது. மனிதன் சேமிக்கும் நல்ல நீரால்தான், இந்தக் கொசுப் பெருக்கம் நடக்கிறது. காலை வேளைகளில் கடிக்கும் பெண் கொசுக்களால்தான் இந்தக் காய்ச்சல் தரும் வைரஸ், மனிதனுக்குள் பரவும். டயர் வியாபாரிகள் மலையென சேமித்துவைத்த டயர், செல்வம் செழிக்க வீட்டு வரண்டாக்களில் வளர்க்கப்படும் ‘லக்கி மூங்கில்’ செடி ஆகியவற்றின் மூலம்தான், இந்த டெங்கு பரவுகிறதோ என உலக சுகாதார நிறுவனமே அச்சம் தெரிவித்திருக்கிறது.

டெங்கு காய்ச்சலைப்போல தமிழர்களை அதிகம் வாட்டுவது சிக்குன்குனியா. 50 வருடங்களாக அதிகம் பரிச்சயம் இல்லாதிருந்து 2006-ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்த இந்தக் காய்ச்சல் பரிசளிக்கும் மூட்டுவலியின் உபாதைகள் சொல்லி மாளாது. பெரும்பாலும் ஓரிரு வாரத்தில் சரியாக வேண்டிய இந்த வலி ஒரு சிலருக்குத் தங்கிப்போய், ஓர் ஆண்டுக்கு வலி தந்து, சாதாரண கையெழுத்து போடுவதில் இருந்து கணினி தட்டச்சு வரை வலி வாட்டி எடுக்கும். வலிக்காக எடுக்கப்படும் மாத்திரைகள், சிலருக்கு உண்டாக்கும் வயிற்றுப் புண் தனி உபாதை.

டெங்கு, சிக்குன்குனியாவைத் தாண்டி சாதாரண காய்ச்சல், சோதனையில் சிக்காத சில வகை மர்மக் காய்ச்சல்கள், போஷாக்காகத் தேறிவரும் குழந்தையின் எடையைத் தடாலடியாகக் குறைக்கும் சளி-இருமல், காணாமல்போன ஆஸ்துமா மூச்சிரைப்பு மீண்டும் தொற்றிக்கொள்வது, குளிர்க்காலத்தில் அதிகரிக்கும் சோரியாசிஸ் தோல் படை நோய் என மழைக் காலத்தில் குத்தாட்டம் போடும் பல நோய்க் கூட்டம்.

சரிஸ காய்ச்சலுக்கு என்ன செய்யலாம்? முதலில் வராமல் தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் பாத்திரத்தை மூடிவையுங்கள். வீட்டுக்கு வெளியே மூலையில் நீங்கள் போட்டுவைத்திருக்கும் பழைய பெயின்ட் டப்பா, ரப்பர் டயர், பாத்திரங்களை அகற்றுங்கள். வேப்பம் புகையோ, கார்ப்பரேஷன் கொசுவிரட்டிப் புகையோ காட்டுங்கள். கொதித்து ஆறிய தண்ணீரை மட்டும் அருந்துங்கள். சூடாக அப்போது சமைத்த உணவை உண்ணுங்கள். உங்களுக்கு லேசான தும்மல், ஜுரம் இருக்கும்போது பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

தொற்றுநோய்க் கூட்டம் அதிகம் இல்லாத, சூழல் அவ்வளவாகச் சிதையாத காலத்தில், ‘குடல் தன்னில் சீதமலாது சுரமும் வராது திறமாமே’ என காய்ச்சலுக்கு வயிற்றில் சேரும் அஜீரணத்தையும் மந்தத்தையும் முக்கியக் காரணமாக அன்று சித்த மருத்துவம் சொல்லியது. அதனாலேயே, ‘உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே’ என பட்டினியை மருந்தாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும்கூட பட்டினியுடன் காய்ச்சலை வெல்லும் பழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது இப்போதைய தீவிர டெங்கு மாதிரியான தொற்றுக்காய்ச்சல்களுக்கு அப்படியே பொருந்தாது. உடலில் நீர்ச்சத்தும் ஆற்றலும் குறைந்து தீவிர நிலைக்கு அழைத்துச்செல்ல வாய்ப்பு உண்டு. ‘சிறு உணவு பெரு மருந்து’ என சித்த மருத்துவம் சொல்வதுபோல, சிறு உணவாகிய கஞ்சியை மட்டுமே காய்ச்சலின்போது உணவாகக் கொடுக்க வேண்டும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி, புழுங்கல் அரிசி, பூண்டு கருஞ்சீரகக் கஞ்சிஸ இவை மட்டுமே காய்ச்சல் உணவாக இருக்க வேண்டும். நிறையக் கொதித்து ஆறிய நீரும், புளிப்பில்லாத மாதுளை, ஆரஞ்சுப்பழ ரசமும் பருக வேண்டும்.

லேசாக கண்களையும் மூக்கையும் கசக்கும் குழந்தைக்கு, அடுத்த ஆறு மணி நேரத்தில் தும்மலுடன்கூடிய காய்ச்சல் வரக்கூடும். நொச்சித்தழை நான்கு கைப்பிடி, மஞ்சள் இரு துண்டுகள் போட்டுக் காய்ச்சி அந்த ஆவியைப் பிடிக்கவைக்க, மழைக்கால காய்ச்சல் மறையும். திப்பிலி, மஞ்சள், ஓமம், மிளகு இந்த நான்கையும் நல்ல பொடியாக்கி, ஒரு வேட்டித்துணியில் தூவி, திரிபோல் சுருட்டி, வேப்பெண்ணெயில் நனைத்து, கொளுத்தி, அந்தப் புகையை முகர்வது நீரேற்றம், தலைவலியுடன்கூடிய ஜுரத்தைப் போக்கும். சாதாரண சுக்கு அரைத்து நெற்றியில் பற்று இடுவது, சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரையைப் பற்று இடுவது மழைக்காலத் தும்மல் சளியுடன்கூடிய சைனசைட்டிஸ் நோயில் வரும் ஜுரத்துக்கான எளிய மருந்து. அதேபோல், தும்பைப் பூச் சாற்றை மூக்கில் துளியாக விடுவதும் மழைக்கால சளி, காய்ச்சல் நீக்கும் எளிய மருந்து.

நிலவேம்புக் குடிநீர், தமிழகத்தில் 2006-ல் சிக்கன்குனியா, 2012-ல் டெங்குவில் இருந்து பெருவாரியான மக்களைக் காப்பாற்றிய சித்த மருந்து. பலருக்கும் கஷாயம் என்றதும் சின்ன பயம் இப்போதும் உண்டு. நாம் தினம் சாப்பிடும் தேநீர், சீனர்கள் நெடுங்காலம் சாப்பிட்ட தேயிலைக் கஷாயம்தான். வற்றக்குழம்பும் சாம்பாரும்கூட ஒரு வகையில் செறிவூட்டப்பட்ட கஷாயம்தான். நோய்க்கு ஏற்ற கஷாயம் குடிக்கும் மரபு, நம் மண்ணில் மீட்டெடுக்கப்பட வேண்டிய பெரும் மருத்துவ மரபு. ஜுரத்துக்கு நிலவேம்புக் கஷாயம், அஜீரணத்துக்கு சீரக கஷாயம், வயிற்றுப்போக்குக்கு ஓமக் கஷாயம், தலைவலிக்கு சுக்குக் கஷாயம், சிறுகுழந்தையின் சளிக்கு துளசிக் கஷாயம், தொண்டைக் கரகரப்புக்கு கற்பூரவல்லிக் கஷாயம்ஸ என வீட்டிலேயே முதலுதவியாகக் கொடுக்கப்பட்ட இந்தக் கஷாய மரபு, வேகமாக வழக்கொழிந்து வருகிறது.

‘அடஸ கஷாயம் செய்ய இப்போ எங்கே சார் நேரம் இருக்கு? வேணும்னா ஆன்லைன் ஆஃபர்ல அந்தக் கஷாயப் பொடி கிடைக்குமானு சொல்லுங்கஸ உடனே ஆர்டர் பண்றேன்’ எனக் கேட்போர் அதிகம். கஷாய வெண்டிங் மெஷின் அதற்கான தீர்வு. கோலாவுக்கும் காபிக்கும் பொருத்தப்படும் வெண்டிங் மெஷின்களில் கஷாயத்தை ஊற்றினால், அதற்கு கசக்கவா செய்யும். செலவும் மிகச் சில ஆயிரங்கள்தான். அரசுக்கு அது மிகச் சிறிய செலவு. ஆனால், ஓரிரு அரசு சித்த மருத்துவமனையைத் தாண்டி எங்கும் இது வரவில்லை.

அனைத்து மருத்துவமனைகளில், பொது இடங்களில், அம்மா உணவகங்களில் கஷாய வெண்டிங் மெஷின்களைப் பொருத்தி எவரும் அதை எளிதில் குடிக்கும்படி செய்தால், எத்தனையோ நோய்களை ஆரம்ப அறிகுறிகளிலேயே தடுக்கலாம். சில லட்சங்களை வெண்டிங் மெஷின் பயன்பாட்டுக்கு எனச் செலவழித்தால், அரசின் மருத்துவ ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாயைக் குறைக்கலாம். பெரும் பெயரும் கிட்டும்ஸ செய்வார்களா?