Home பெண்கள் தாய்மை நலம் இரும்புச்சத்து மாத்திரை அதிகம் சாப்பிட்டால் கருக்குழந்தைக்கு ஆபத்தா?

இரும்புச்சத்து மாத்திரை அதிகம் சாப்பிட்டால் கருக்குழந்தைக்கு ஆபத்தா?

16

நான் கர்ப்பத்துக்காகப் பரிசோதனைக்குச் சென்றபோது, ரத்தப் பரிசோதனை செய்து, ரத்தம் குறைவாக இருப்பதாகவும், இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார். ஆனால், கர்ப்பக் காலத்தில் மாத்திரைகள் சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும் என்கிறார்களே? இரும்புச் சத்து மாத்திரை மட்டும் குழந்தையைப் பாதிக்காதா?

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ரத்த சோகை ஏற்படும். அதாவது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தவிர, கருவுக்குக் கூடுதலான சக்தி தேவை, இந்த சக்தியை அளிப்பதற்கான ஊட்டச்சத்து மற்றும் கரு உயிர் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் எல்லாம் தாயின் ரத்தம் மூலமாகவே குழந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே, கருவைச் சுமக்கும் தாய்க்குப் போதுமான ரத்தம் இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இரும்புச் சத்து மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன. இது உங்கள் உடல்நிலையை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அளிக்கப்படுவதால் குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது.

இதுவரை எனக்கு அம்மைத் தடுப்பூசி போடப்படவில்லை. கர்ப்பப் பரிசோதனைக்குச் சென்றால் கண்டிப்பாக அம்மைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கருத்தரித்துக் கொள்ளுங்கள் என டாக்டர் ஆலோசகனை கூறுகிறார். இது ஏன்? அம்மைத் தடுப்பூசி போடாவிட்டால் என்னவிதமான பிரச்னைகள் ஏற்படும்?

அம்மை நோய்களை உண்டாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால், நோய்த் தடுப்பாற்றல் இல்லாத உங்களுக்குள் எளிதாக ஊடுருவி, பனிக்குடத்தைத் துளைத்துச் சென்று பாதுகாப்பாக இருக்கும் குழந்தைக்குப் பாதிப்பை உண்டாக்கும். கருத்தரித்த மூன்று மாத காலத்துக்குள் இந்த பாதிப்புகள் நேரிடுவதற்கான வாயப்புகள் அதிகம் என்பதால் தான், கருத்தரிக்கத் திட்டமிடும்போதே அம்மைத் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டு, பிறகு கருத்தரிக்குமாறு மருத்துவர் வலியுறுத்துவார்.

மஞ்சள் காமாலை வராமல் தடுப்பதற்காகக் கருவுறும் முன்பே ஹெபைடிஸ் – பி வைரஸ் இருக்கிறதா பரிசோதிக்கச் சொல்கிறார்கள். சிபிலிஸ் பரிசோதனையும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். லாரி டிரைவராக இருக்கும் என் கணவர், இந்தத் தேவையற்ற பரிசோதனைகளால் செலவு அதிகமாகும் என்கிறார். இது அவசியமா? இந்தப் பரிசோதனை என் நடத்தையைப் பாதிப்பதுபோல் ஆகாதா?

சிபிலிஸ் என்ற பால்வினை நோய்த்தொற்றினால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குச் சிகிச்சை செய்யாமல் விடும்போது பதினாறாவது வாரத்திலேயே கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒருவேளை, நோய்த்தொற்று இருப்பது முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டால் அதைக் குணப்படுத்திவிடலாம் என்பதற்காகவே சிபிலிஸ் போன்ற பால்வினைப் பரிசோதனை மேற்கொள்கிறார்கள்.

இது ஒரு பாதுகாப்பான, பாதுகாப்புக்கானப் பரிசோதனையே தவிர, நடத்தையை பரிசீலிப்பதற்கானப் பரிசோதனை அல்ல.